சந்திரயான்-2 விண்கலம் அடுத்த மாதம் 15-ந் தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி


சந்திரயான்-2 விண்கலம் அடுத்த மாதம் 15-ந் தேதி விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி
x
தினத்தந்தி 23 Jun 2019 6:45 PM GMT (Updated: 23 Jun 2019 6:07 PM GMT)

சந்திரயான்-2 விண்கலம் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் நெல்லையில் கூறினார்.

நெல்லை,

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே விஜயநாராயணம் கட்டபொம்மன் கடற்படைக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு இந்திய கடற்படை கப்பல்களுக்கு தகவல் கொடுப்பது தொடர்பான மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த மையத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் சிவன் கலந்து கொண்டு, புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்திய விண்வெளி நிறுவனம் நாட்டு மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. தகவல் தொடர்பு, பாதுகாப்புக்கு தேவையான திட்டங்களை இஸ்ரோ நிறுவனம் அமல்படுத்தி வருகிறது. அகண்ட அலைவரிசை இணையதள சேவை கிடைக்கும் வகையில் பல்வேறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறோம்.

சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. திட்டமிட்டபடி இந்த விண்கலம் அடுத்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து அனுப்பப்படும். சந்திரயான்-2 விண்கலம் சந்திரனில் கனிமங்களை ஆய்வு செய்கிறது.

ககன்யான் விண்கலத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றது. பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்பின் படி, 2022-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் இந்த விண்கலத்தை விண்ணுக்கு ஏவ நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story