பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு


பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு
x
தினத்தந்தி 24 Jun 2019 8:59 PM GMT (Updated: 24 Jun 2019 8:59 PM GMT)

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் குறைந்த எண்ணிக்கை கொண்ட அரசு பள்ளி மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னை,

அரசு பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் கட்டாய இடமாறுதல் செய்வது தொடர்பான அரசாணை கடந்த வெள்ளிக் கிழமை பிறப்பிக்கப்பட்டது.

அரசாணையில், பல்வேறு தகவல்களை அரசின் பள்ளிக்கல்வி துறை பதிவு செய்து இருந்தது. அதில் ஒன்றுதான், குறைந்த எண்ணிக்கை கொண்ட மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்பது ஆகும்.

நகர்ப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 30 மாணவர்கள், கிராமப்புறத்தில் 15 மாணவர்களுக்கும் குறைவாக இருக்கக்கூடாது. அந்த பள்ளியில் மாணவர்கள் குறைவாக இருந்த பாடப்பிரிவுகளை நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்

இதன் அடிப்படையில் பார்க்கும்போது 50 சதவீதத்துக்கும் மேலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

அரசின் இந்த திட்டத்தால் கிராமப்புற மாணவர்களின் படிப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். கிராமப்புறத்தில் ஒவ்வொரு மேல்நிலைப்பள்ளிகளுக்கும் இடைபட்ட தூரம் என்பது 10 முதல் 20 கிலோ மீட்டர் அளவில் இருக்கும் என்பதால், அந்த மாணவர்கள் படிப்பை தொடரமுடியாமல் கூட போக வாய்ப்பு இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறன் கூறியதாவது:-

ஏற்றுக்கொள்ள முடியாது

அரசின் இந்த செயல் திட்டம் அரசு பள்ளிகளை ஊக்கப்படுத்துவதாக தெரியவில்லை என்றும், மாறாக தனியார் பள்ளிகளை வளர்த்துவிடுவதற்கும், கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் நோக்கிலும் இருக்கிறது. கிராமப்புறத்தில் இப்படி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கிராமப்புறத்தில் உள்ள மாணவர்கள் அனைவரும் கல்வி அறிவை பெற வேண்டும் என்ற அடிப்படையில் தான் அப்போதெல்லாம் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. நகர்ப்புறத்தில் இந்த பாதிப்பு குறைவாக தான் இருக்கும்.

குழந்தைகள் இலவச கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.) மூலம் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் ரூ.100 கோடி மானியத்தில் மாணவர்களை சேர்க்க துடிக்கும் அரசு, நம்முடைய அரசு பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டாதது ஏன்?

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story