கோதாவரி, கிருஷ்ணா நதியில் இருந்து பாலாற்றுக்கு தண்ணீர் பிரதமரை நேரில் சந்தித்து ஜெகத்ரட்சகன் எம்.பி. வலியுறுத்தல்


கோதாவரி, கிருஷ்ணா நதியில் இருந்து பாலாற்றுக்கு தண்ணீர் பிரதமரை நேரில் சந்தித்து ஜெகத்ரட்சகன் எம்.பி. வலியுறுத்தல்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:08 PM GMT (Updated: 24 Jun 2019 10:08 PM GMT)

அரக்கோணத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண கோதாவரி, கிருஷ்ணா நதியில் இருந்து பாலாற்றுக்கு தண்ணீர் கொண்டுவரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து ஜெகத்ரட்சகன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

பிரதமர் நரேந்திர மோடியை அரக்கோணம் தொகுதியின் தி.மு.க. எம்.பி. எஸ்.ஜெகத்ரட்சகன் நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகம் கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக எனது அரக்கோணம் தொகுதி சமீபகாலங்களில் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

பொதுமக்களுக்கு குடிநீரும், பிற தேவைகளுக்கு பயன்படுத்துவதற்கு தண்ணீரும் கிடைப்பது இல்லை. இதேபோல விவசாயிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வதற்கும், கால்நடைகளுக்கு தண்ணீரும் கிடைப்பதில்லை. தண்ணீர் பஞ்சம் என்னுடைய தொகுதி மக்களை அனைத்து வகைகளிலும் பாதிப்படையச் செய்துள்ளது.

ரெயில் மூலம் தண்ணீர்

தண்ணீர் பஞ்சத்துக்கு தீர்வு அளிக்கும் வகையிலும், வரும் ஆண்டுகளில் நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்காகவும் நான் முன்மொழியும் அம்சங்களில் நீங்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். போர்க்கால அடிப்படையில் கீழ்கண்ட வழிகளில் நீங்கள் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

* அண்டை மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் தண்ணீர் கொண்டுவர ஏற்பாடு செய்யவேண்டும்.

* ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் ஏராளமான குக்கிராமங்கள் உள்ளன. எனவே ஒரு பஞ்சாயத்தில் குறைந்தது 10 ஆழ்துளை கிணறுகளை அமைக்க வேண்டும்.

* அரக்கோணம் தொகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தமிழக அரசு விரைவாக முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

* மழை நீரை சேமித்து வைக்கும் வகையிலும், நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கும் வகையிலும் ஏரிகள், குளங்களை தூர்வாரி ஆழப்படுத்தவேண்டும்.

பாலாற்றுக்கு தண்ணீர்...

* மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கு மிகப்பெரிய அளவில் புத்துயிர் கொடுக்கவேண்டும்.

* தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அளிக்கும் விதமாக கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதியில் இருந்து என்னுடைய தொகுதியில் உள்ள பாலாற்றுக்கு தண்ணீர் கொண்டுவரவேண்டும்.

தண்ணீரை தேடுவதற்கு நீண்ட தூரம் சென்று ஆயிரக்கணக்கானோர் படும் இன்னல்களை கருத்தில்கொண்டு நிரந்தர மற்றும் தற்காலிகமாக தண்ணீர் பிரச்சினையை தீர்க்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு நீங்கள் உத்தரவிடவேண்டும். மேலும் மேற்கண்ட திட்டங்களை என்னுடைய தொகுதியில் அமல்படுத்துவதற்கு ‘பிரதமரின் கிரிஷி சிஞ்சாயி’ திட்டத்தின் கீழ் தேவையான நிதியை ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் எஸ்.ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.

நீர்வளத்துறை மந்திரியிடம்...

இதே கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தையும் நேரில் சந்தித்து எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. வழங்கினார்.

Next Story