தொழில்நுட்ப கோளாறு: 27-ந் தேதி முதுகலை கணினி ஆசிரியர் மறுதேர்வு 1,221 பேர் எழுதுகிறார்கள்


தொழில்நுட்ப கோளாறு: 27-ந் தேதி முதுகலை கணினி ஆசிரியர் மறுதேர்வு 1,221 பேர் எழுதுகிறார்கள்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:30 PM GMT (Updated: 24 Jun 2019 10:30 PM GMT)

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட 3 மையங்களில் முதுகலை கணினி ஆசிரியர் மறுதேர்வு 27-ந் தேதி நடக்கிறது. இதில் 1,221 பேர் எழுத இருக்கின்றனர்.

சென்னை,

தமிழகம் முழுவதும் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நேற்று முன்தினம் 119 மையங்களில் ஆன்லைன் மூலம் நடைபெற்றது. மொத்தம் 814 காலி பணியிடங்களுக்கு 30,833 பேர் விண்ணப்பித்து இருந்தனர். சில தேர்வு மையங்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும், சில மையங்களில் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட மையங்களில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர்கள் தேர்வு வாரியம் கூறியிருந்தது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் வெங்கடேஷ் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

3 மையங்களில் மறுதேர்வு

தேர்வு நடைபெற்ற பல மையங்களில் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியான முறையில் தேர்வு நடந்து முடிந்தது. சில இடங்களில் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக சர்வரில் கோளாறு ஏற்பட்டது. ஆன்லைன் தேர்வுகளில் இதுபோல் தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவது வழக்கம் தான். அதை தொழில்நுட்ப குழுவினர் சரிசெய்துவிடுவார்கள். அப்படி சரிசெய்ய முடியவில்லை என்றால் மறுதேர்வு நடத்தப்படும்.

கே.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி (944 தேர்வர்கள்), கொங்குநாடு என்ஜினீயரிங் கல்லூரி (118 தேர்வர்கள்), அன்னை என்ஜினீயரிங் கல்லூரி (159 தேர்வர்கள்) ஆகிய 3 கல்லூரிகளில் மட்டுமே தொழில்நுட்ப கோளாறு காரணமாக தேர்வு பாதிக்கப்பட்டது. அந்த இடங்களில் மட்டும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மறுதேர்வு நடத்தப்படும். இதில் 1,221 பேர் தேர்வை எழுத இருக்கிறார்கள். இதற்கான ‘ஹால்டிக்கெட்’ விரைவில் அனுப்பப்படும்.

வழக்கமாக இரண்டுவித வினாத்தாள்கள் தயாரிப்போம். அதில் ஒன்றை ஏற்கனவே பயன்படுத்திவிட்டதால், மற்றொன்றை மறுதேர்வுக்கு உபயோகப்படுத்துவோம். இந்த 3 மையங்களை தவிர மற்ற இடங்களில் மறுதேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை.

முறைகேடு நடக்கவில்லை

திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரியில் இருந்த மையங்களில் நடைபெற்ற தேர்வில் முறைகேடுகள் நடந்ததுபோல செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ மூலம் பரப்பப்பட்டு வருகிறது.

தேர்வு ரத்து என்று அறிவிக்கப்பட்ட மையங்களில் தேர்வர்கள் போராட்டம் நடத்திவிட்டு, மீண்டும் உள்ளே வந்து செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள். இதில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை. அனைத்து தேர்வு மையங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

நடவடிக்கை

செல்போனை உள்ளே எப்படி எடுத்துவந்தார்கள்? வீடியோ எப்படி எடுத்தார்கள்? என்பது குறித்து மாவட்ட வருவாய் அதிகாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு, முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் விசாரணை நடத்தி அறிக்கை தருவார்கள். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story