புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்; பாலகுருசாமி பேச்சு


புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்; பாலகுருசாமி பேச்சு
x
தினத்தந்தி 29 July 2019 5:32 PM GMT (Updated: 29 July 2019 5:32 PM GMT)

புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசியுள்ளார்.

சென்னை,

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டு துறை அண்மையில் தேசிய வரைவு கல்வி கொள்கையை வெளியிட்டது. அதில் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இந்த கல்வி கொள்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த அறிக்கை தமிழாக்கம் செய்யப்பட்டு www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரைவு கல்வி கொள்கை குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கருத்து தெரிவிக்க அறிவிக்கப்பட்ட கால அவகாசம் ஜூலை 31ந்தேதியுடன் முடிவடைய இருந்தது.

கல்வி கொள்கை அம்சங்களை முழுமையாக அறிந்து கொள்ள அவகாசத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசியல் தலைவர்களும், எம்.பி.க்களும் அவகாசம் கேட்டிருந்த நிலையில், ஆகஸ்ட்15 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை குறித்து வரும் ஆகஸ்ட் 8ந்தேதி ஆலோசனை  நடத்த அனைத்து மாநில முதல்வர்கள், கல்வித்துறை அமைச்சர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அழைப்பு விடுத்து உள்ளது.

இதுபற்றி சென்னையில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி பேசும்பொழுது, புதிய கல்வி கொள்கையை மத்திய அரசு நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும், இதில் பல்வேறு சிறப்புகள் உள்ளன என கூறினார்.

புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர்கள் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர்.  தற்போது உள்ளது போன்று விவாதங்கள் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் எதிர்காலம் நன்றாக அமையாது என அவர் கூறியுள்ளார்.

Next Story