அத்திவரதரை தரிசிக்க 30வது நாளாக அலைமோதும் கூட்டம்; இன்று, இளம் நீல நிற பட்டாடையில் காட்சி


அத்திவரதரை தரிசிக்க 30வது நாளாக  அலைமோதும் கூட்டம்; இன்று, இளம் நீல நிற பட்டாடையில் காட்சி
x
தினத்தந்தி 30 July 2019 6:59 AM GMT (Updated: 30 July 2019 6:59 AM GMT)

30ம் நாளான இன்று, அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் கூட்டம். இளம் நீல நிற பட்டாடையில் காட்சி அளிக்கிறார்.

சென்னை,

காஞ்சீபுரத்தில் அத்திவரதர் வைபவத்தின் 30ம் நாளான இன்று, இளம் நீல நிற பட்டாடையில், செண்பகப்பூ மற்றும் மல்லிகைப்பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தரிசனம் அளித்து வருகிறார்.

சயன கோலத்தில் தரிசனம் அளிப்பது , நாளையுடன் நிறைவடைவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை, நான்கு முப்பது மணிக்கு நடை திறக்கப்பட்டதும், அங்கு காத்திருந்த பக்தர்கள், ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து 60 ஆயிரம் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.

நாளை மறுநாள் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால், நாளை மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவிலுக்கு உள்ளே வந்தவர்கள், மாலை 5 மணி வரை மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வி.வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றும், டோனர் பாஸ், வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மதியம் 12 மணி வரையிலும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரும் 3 ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால், அன்று மதியம் 3 மணிக்கு, நடை அடைக்கப்பட்டு, திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்திவரதரை தரிசிக்க 30வது நாளாக கூட்டம் அலைமோதுவதால், அங்குள்ள அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story