கரூர் தந்தை மகன் கொலை : மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 6 பேர் சரண்


கரூர் தந்தை மகன் கொலை : மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 6 பேர் சரண்
x
தினத்தந்தி 31 July 2019 8:28 AM GMT (Updated: 31 July 2019 10:35 AM GMT)

குளித்தலை அருகே ஆக்கிரமிக்கப்பட்ட குளத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

மதுரை,

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60). விவசாயி. இவருடைய மகன் நல்லதம்பி (42). இவர்களுக்கு கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த முதலைப்பட்டி அய்யனார் கோவில் அருகே சொந்தமாக 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் மல்லிகை பூ, ரோஜா பூ ஆகிய மலர்ச்செடிகளை பயிரிட்டுள்ளனர். இதனை கவனிப்பதற்காக அந்த நிலத்தின் அருகே வீடு கட்டி வீரமலை, குடும்பத்துடன் வசித்து வந்தார்.

முதலைப்பட்டியில் ஆக்கிரமிப்பில் இருந்த ஒரு குளத்தை மீட்பது தொடர்பாக வழக்கறிஞர் மூலம் வீரமலை, கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட குளத்தை அளந்து சென்றனர். இது தொடர்பாக வீரமலைக்கும், சில நபர்களுக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலையில் முதலைப்பட்டி பகுதியில் வீரமலை, நல்லதம்பி ஆகியோரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து வீரமலையின் மகள் அன்னலெட்சுமி(38), குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் குளித்தலை போலீசார் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய முதலைப்பட்டியை சேர்ந்த சவுந்திரராஜன் என்ற பெருமாள்(35), அதே பகுதியான கீழமேட்டை சேர்ந்த ஜெயகாந்தன்(23), சசிகுமார்(33) உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் ஜெயகாந்தன் மீது குளித்தலை, லாலாபேட்டை, சிந்தாமணிப்பட்டி மற்றும் திருச்சி சோமரசம்பேட்டை போலீஸ் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் அறிவுறுத்தலின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு, கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் இந்த இரட்டைக் கொலை தொடர்பாக முதலைப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் என்கிற சவுந்தர்ராஜன் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22) ஜெயகாந்தன்(23), பெருமாள் (35)  ஆகியோர் மதுரை 6-வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

சரணடைந்தவர்களை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். பின்னர் 6 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Next Story