மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 10:33 PM GMT)

தென்மேற்கு பருவகாற்று சாதகமாக வீசும் நிலை உருவாகி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி கேரளாவில் தொடங்கியது. இந்த காலகட்டங்களில் தமிழகத்தில் பெரிய அளவில் மழை இருக்காது. ஆனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் மழை இருக்கும்.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தென்மேற்கு பருவகாற்று கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமாக இருந்ததால், இந்த பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. தென்மேற்கு பருவகாற்று சற்று ஓய்ந்ததால் இந்த பகுதிகளில் தற்போது மழையும் குறைந்து இருக்கிறது.

இந்த நிலையில் கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று சாதகமாக வீசும் நிலை உருவாகிறது. இதனால் கேரளாவில் 14-ந் தேதி (நாளை) முதல் மீண்டும் கனமழை பெய்யக்கூடும். இந்த தென்மேற்கு பருவகாற்றால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு வருகிற 15-ந் தேதி (நாளை மறுதினம்) மழைக்கான சாதகமான சூழல் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘வால்பாறை, நடுவட்டம், தேவாலாவில் தலா 3 செ.மீ., சோலையாறு, சின்கோனா, செங்கோட்டையில் தலா 2 செ.மீ., ஜி பஜார், சின்னக்கலாறு, குளச்சலில் தலா ஒரு செ.மீ.’ மழை பெய்துள்ளது.

Next Story