தொகுதி சார்ந்த பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் தி.மு.க. எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


தொகுதி சார்ந்த பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் தி.மு.க. எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Aug 2019 10:15 PM GMT (Updated: 29 Aug 2019 7:18 PM GMT)

தொகுதி சார்ந்த பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்று தி.மு.க. எம்.பி.க்களிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சென்னை, 

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை நடந்தது. இந்த கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.பி.க்கள் தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி, ஜெகத்ரட்சகன், ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன், தமிழச்சி தங்கபாண்டியன் உள்பட தி.மு.க. வின் அனைத்து எம்.பி.க்களும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தமிழகத்தின் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எதிரொலிக்க வேண்டும். நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நேரங்களில் தொகுதி மக்களுடன் கலந்து பேசி, முக்கிய பிரச்சினைகளை அவையில் எடுத்துரைக்க வேண்டும். மக்கள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். தொகுதி மேம்பாட்டு நிதியை கொண்டு தொகுதி சார்ந்த பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து

தி.மு.க. தலைவராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று ஓராண்டு ஆனதையொட்டி அவருக்கு கூட்டத்தில் பங்கேற்ற எம்.பி.க்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த ஓராண்டில் தி.மு.க.வை இந்தியாவின் 3-வது பெரிய கட்சியாக உருவாக்கியதற்கும், நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியில் 38 தொகுதிகளில் வெற்றியை பெற்று சாதனை படைத்ததற்கும் நன்றியும், பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. தலைவராக நானும், பொருளாளராக துரைமுருகனும் பொறுப்பேற்று ஓராண்டு காலம் நிறைவடைந்து, இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். இந்த ஓராண்டில், ஊடகத்துறையைச் சார்ந்த நீங்கள், எங்களைப் பாராட்டி, ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி, விமர்சிக்க வேண்டிய செய்திகளையும் தெளிவோடு எடுத்துச் சொல்லி, எங்களை ஊக்கப்படுத்தியிருப்பதற்காக நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் பணி

சிலர் அறிவுப்பூர்வமான கருத்துகளையும், யோசனைகளையும் எனக்கு சொல்லி இருக்கிறார்கள். எனவே, அவற்றையெல்லாம் நான் உள்வாங்கிக்கொண்டு, நிச்சயமாக என்னுடைய கடமையை நான் ஆற்றுவேன்.

தி.மு.க. எம்.பி.க்கள் கூட்டத்தில் அனைவரும் கலந்துக் கொண்டார்கள். இந்த கூட்டத்தில், இதுவரையில் நாடாளுமன்றத்தில் அவர்கள் ஆற்றி யிருக்கும் பணிகள், தொடர்ந்து ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விவாதித்திருக்கிறோம்.

மேலும், மக்கள் பணியில் உங்கள் கடமையை தொடர்ந்து ஆற்றிட வேண்டும். வாக்களித்திருக்கும் மக்களுக்கு நன்றி சொல்லும் பணியையும் விரைவாக முடித்திட வேண்டும். தொடர்ந்து மக்களை சந்திப்பது மட்டுமல்ல, அவர்கள் கோரிக்கைகளை, மனுக்களை, ஒரு அலுவலகத்தில் அமர்ந்து அவற்றையெல்லாம் நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடத்தில் அதுகுறித்து எடுத்துச் சொல்லி, அதை நிவர்த்தி செய்யும் பணிகளிலும் முழுமையாக ஈடுபடவேண்டும் என்று அவர்களிடம் வலியுறுத்தி கூறியிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சோதனை-சாதனை

மு.க.ஸ்டாலினிடம் நிருபர்கள், ‘கடந்த ஒரு வருடத்தில் நீங்கள் சந்தித்த சோதனை என்று ஏதாவது இருக்கிறதா?’ என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மு.க. ஸ்டாலின், ‘நான் சோதனைகளை, சாதனைகளையெல்லாம் எடை போட்டுப் பார்ப்பதில்லை. எப்படி எங்களை கருணாநிதி வழி நடத்திக் காட்டி இருக்கின்றாரோ, அந்த வழிநின்று நாங்கள் எதையும் துணிவோடு சந்திக்க காத்திருக்கிறோம்’ என்றார்.

Next Story