மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கக்கூடாது ஐகோர்ட்டு கேள்வி


மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் முன்னுரிமை வழங்கக்கூடாது ஐகோர்ட்டு கேள்வி
x
தினத்தந்தி 27 Sep 2019 11:15 PM GMT (Updated: 27 Sep 2019 10:55 PM GMT)

அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ஏன் முன்னுரிமை வழங்கக்கூடாது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் தீரன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழக மருத்துவ கல்லூரிகளில் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் உள்ள 260 இடங்களில் 53 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது. மீதமுள்ள 207 இடங்களையும் தமிழக அரசு அந்தந்த தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகங்களிடம் ஒப்படைத்து விட்டது. எனவே இந்த மருத்துவ இடங்களுக்கு முறையான கலந்தாய்வு நடத்தி தகுதியானவர்களைக்கொண்டு அந்த இடங்களை நிரப்ப வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு குறித்தும், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எத்தனை மாணவர்கள் இதுவரை மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்? என்பது குறித்தும் கேள்வி கேட்டு, அதற்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்திய மருத்துவ கவுன்சில் தரப்பில், ‘மருத்துவ இடங்களுக்கான மூன்று கட்ட கலந்தாய்வுக்குப்பின்பும் காலியிடங்கள் இருந்தால் ஒரு இடத்துக்கு 10 மாணவர்கள் என்ற விகிதத்தில் பட்டியல் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால் அந்த பட்டியலின் அடிப்படையில் இந்த இடங்கள் நிரப்பப்பட்டதா? என்பது தெரியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது தமிழக அரசு தரப்பில், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டிற்கான இடங்களை முறையாக நிரப்புவது தொடர்பாக இந்த நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், ‘வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்த 207 இடங்களும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அதிக தொகைக்கு விற்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், ‘பள்ளிப் படிப்புக்காக தனியார் பள்ளிகளுக்கு செல்வோர், மருத்துவ படிப்புக்கு மட்டும் அரசு மருத்துவ கல்லூரிகளை நாடுவது ஏன்? என்றும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் முன்னுரிமை ஏன் வழங்கக்கூடாது? என்றும் கேள்விகளை எழுப்பினர். பின்னர், இதுகுறித்து தமிழக அரசு பதில் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

பின்னர், ‘இந்த வழக்கில் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க வேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

விசாரணையை அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதிக்கு தள்ளி வைக்கிறோம்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story