வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்


வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 28 Oct 2019 11:27 PM GMT (Updated: 28 Oct 2019 11:27 PM GMT)

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் 2 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்கக்கடலில் தெற்கு இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது நாளை (இன்று) குமரிக்கடல் பகுதியில் சற்று வலுப்பெறக்கூடும்.

இது வருகிற 30, 31-ந்தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாலத்தீவுகள், லட்சத்தீவு பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

சென்னையில் எப்படி?

அடுத்து வரும் 2 நாட்களில் தென் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல தென்தமிழகத்தில் மதுரை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களிலும், வட தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும் (நேற்று), தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், தெற்கு கேரளாவை சேர்ந்த கடலோர பகுதிகளில் 29-ந்தேதி (இன்று) முதல் 31-ந்தேதி வரையிலான 3 நாட்களும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் வல்லம், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் தலா 7 செ.மீ. மழையும், நாகை, ராமநாதபுரத்தில் தலா 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. சென்னை விமானநிலையம், வேதாரண்யம், சீர்காழி பெரம்பலூரில் தலா 4 செ.மீ. மழையும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருச்செந்தூர், சாத்தான்குளத்தில் 3 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story