தடுப்பு சுவரில் மோதியது கார் விபத்தில் நடிகர் பலி மனைவி படுகாயம்


தடுப்பு  சுவரில்   மோதியது   கார்   விபத்தில்  நடிகர்  பலி மனைவி  படுகாயம்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:05 PM GMT (Updated: 29 Oct 2019 11:29 PM GMT)

தடுப்பு சுவரில் கார் மோதி, திரைப்பட நடிகர் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார்.

ஆவடி,

‘புழல்’ படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆனவர் மனோ மேனுவல் (வயது 37). இவர், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் நடன கலைஞராக பிரபலமானார். தொலைக்காட்சி தொடர்கள், சினிமா படங்களில் நடித்ததுடன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வந்தார். மேடை நிகழ்ச்சிகளையும் நடத்தி வந்தார்.

சென்னை கொரட்டூர் பாபா நகர், 10-வது தெருவில் மனோ வசித்து வந்தார். இவருடைய மனைவி லிவ்யா (26). கேரளாவை சேர்ந்த இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார்.

தடுப்பு சுவரில் மோதியது

நேற்று முன்தினம் இரவு மனோ, தனது மனைவியுடன் சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டு காரில் தனது வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். காரை மனோ ஓட்டினார். பின் இருக்கையில் அவரது மனைவி லிவ்யா அமர்ந்து இருந்தார்.

ஆவடியை அடுத்த மோரை பகுதியில் வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சாலை சர்வீஸ் சாலையில் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் சில அடி தூரம் வரை தடுப்பு சுவரில் உரசியபடியே சென்ற கார், பின்னர் நின்றது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது.

பலியானார்

இதில் படுகாயம் அடைந்த நடிகர் மனோ, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி லிவ்யா படுகாயம் அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், லிவ்யாவை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பலியான மனோ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story