முடியட்டும் பிஞ்சு சாவுகள் “வானம் பார்க்கும் தொழில்நுட்பமே குனிந்து பாதாளம் பார்” வைரமுத்து இரங்கல்


முடியட்டும் பிஞ்சு சாவுகள் “வானம் பார்க்கும் தொழில்நுட்பமே குனிந்து பாதாளம் பார்” வைரமுத்து இரங்கல்
x
தினத்தந்தி 29 Oct 2019 10:22 PM GMT (Updated: 29 Oct 2019 10:22 PM GMT)

சுஜித் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

சென்னை, 

கவிஞர் வைரமுத்து பேசி இருப்பதாவது:-

“அதோ ஒருத்தியின் கண்ணில் உலகத்தின் கண்ணீர். வந்த மழையும் இனி எந்த மழையும் அந்த தாயின் கண்ணீர் கறையை கழுவ இயலுமா... அடேய் சுஜித் இத்தனை பேர் அழுத கண்ணீரில் நீ மிதந்து மிதந்து மேலே எழும்பி இருக்கலாம். ஆனால் அழுத கண்ணீரெல்லாம் உன்னை அழுக வைத்து விட்டதே.

உன்னை மீட்க கையில் கயிறு கட்டிப்பார்த்தோம். ஆனால் உன் கால் விரலில் கயிறு கட்டி விட்டதே மரணம். எவன் அவன் பின் கூட்டி பிறந்த குழந்தைக்கு, முன் கூட்டியே சவக்குழி வெட்டியவன். உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ. நடக்க கூடாதது நடந்தேறி விட்டது.

மரணத்தில் பாடம் படிப்பது மடமை சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமை சமூகம். ஏய் மடமை சமூகமே வாழ்வின் பக்கவிளைவு மரணமெனில் மரணத்தின் பக்கவிளைவு ஞானம் தானே. அந்த சவக்குழிக்குள் மண் விழுவதற்குள் அத்தனை அபாய குழிகளையும் மூடிவிடு. அந்த மெழுகுவர்த்தி அணைவதற்குள் அத்தனை கண்ணீரையும் துடைத்து விடு.

ஏய் வானம் பார்க்கும் தொழில்நுட்பமே. சற்றே குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள். யாரும் எழுந்து கொள்ள வேண்டாம். ஜன கன மன”

இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.

நடிகர் விவேக் ‘டுவிட்டர்’ பக்கத்தில், “கிட்டத்தட்ட 4 நாட்களாக உணவு உறக்கம் மறந்து ஓய்வின்றி உழைத்து களைத்து ஓய்ந்து போய் நிற்கும் நல்உள்ளங்களுக்கு... சுஜித் உடலை எடுத்துவிட்டோம். இப்போது துயரக்குழியில் நாங்கள் விழுந்து விட்டோம். எங்களை யார் எடுப்பது?” என்று கூறி உள்ளார்.

Next Story