அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி பேட்டி


அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 29 Oct 2019 11:00 PM GMT (Updated: 29 Oct 2019 10:25 PM GMT)

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்று குழந்தை சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திருச்சி,

திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை சுஜித், 5 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டான். குழந்தையின் உடலுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பிறகு, பாத்திமாபுதூரில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்தநிலையில் குழந்தை சுஜித்தின் பெற்றோர் பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலாமேரி ஆகியோருக்கு ஆறுதல் கூறுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து கார் மூலம் நேரடியாக நடுக்காட்டுப்பட்டிக்கு நேற்று மாலை 5.55 மணிக்கு வந்தார்.

அங்கு வீட்டின் முன்பு வைக்கப்பட்டு இருந்த குழந்தை சுஜித்தின் புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து வீட்டினுள் சென்று பிரிட்டோ ஆரோக்கியராஜ், அவரது மனைவி கலாமேரி ஆகியோரை சந்தித்து முதல்-அமைச்சர் ஆறுதல் கூறினார்.

அதன்பிறகு வெளியே வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

இரவு, பகல் பாராமல் மீட்பு பணி

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தகவல் கிடைத்தவுடன் அமைச்சர்களை விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொள்ளும்படி கூறினேன். உடனடியாக அமைச்சர்கள், வருவாய் நிர்வாக ஆணையர், தீயணைப்புத்துறை டி.ஜி.பி. என அனைவரும் இரவு, பகல் பாராமல் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணியில் ஓ.என்.ஜி.சி. நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் அதிகாரிகள், அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப குழுவினர் ஆகியோரை பயன்படுத்தி மீட்பு பணி நடந்தது.

குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்தோம். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. மீட்பு பணிக்கு உதவியாக 200 தீயணைப்பு வீரர்கள், 200 போலீசார், வருவாய்த்துறை, மருத்துவத்துறை என அனைத்துத்துறையினரும் களத்தில் இருந்தனர். இவ்வளவு ஆட்களையோ, தொழில்நுட்பங்களையோ கடந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்களின்போது பயன்படுத்தவில்லை. துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நேரடியாக இங்கு வந்து உரிய ஆலோசனைகளை வழங்கினார்.

தி.மு.க. ஆட்சியில் நடந்த சம்பவம்

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மீட்பு பணியில் தோல்வி ஏற்பட்டதால் தான் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை என்று தவறான தகவலை கூறி சென்று இருக்கிறார். அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. இங்கு எந்த அளவில் மீட்பு பணி நடந்தது என்பது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும். ராணுவத்தை வரவழைத்து இருக்கலாம் என்று ஸ்டாலின் கூறுகிறார். இதேபோல் தான் முக்கொம்பில் கொள்ளிடம் அணை உடைந்தபோதும்கூட அங்கு வந்து பார்த்துவிட்டு ராணுவத்தை வரவழைக்க வேண்டும் என்று கூறினார்.

ராணுவ அதிகாரிகள் வந்து பார்த்துவிட்டு தமிழக அரசு பொதுப்பணித்துறை மூலமாக முக்கொம்பில் மேற்கொள்ளும் பணி சரியானது என்று கூறிவிட்டு சென்றார்கள். இப்போதும் ஓ.என்.ஜி.சி., நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட சிறந்த வல்லுனர்களை கொண்டு தான் பணிகளை செய்தோம். கடந்த 2009-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந்தேதி தி.மு.க. ஆட்சியின்போது, தேனி மாவட்டத்தில் மாயஇருளன் என்ற 6 வயது சிறுவன் இதேபோல் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டான். அந்த சிறுவனை இறந்த நிலையில் தான் மீட்டார்கள். அந்த சிறுவனுக்காவது 6 வயது. ஆனால் இந்த குழந்தை சுஜித்துக்கு 2 வயது தான் ஆகிறது.

பொய்யான குற்றச்சாட்டு

ஆகவே ஸ்டாலின் வேண்டுமென்றே தவறான செய்தியை திட்டமிட்டு குறுகிய எண்ணத்துடன் கூறி இருக்கிறார். 2009-ம் ஆண்டு தேனியில் சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தபோது, இவர்கள் ஏன்? ராணுவத்தை அனுப்பவில்லை. மக்கள் மத்தியில் அரசு மீது தவறான எண்ணத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். குழந்தை சுஜித்தை இழந்து வாடும் குடும்பத்துக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் நிவாரண நிதியாக வழங்கப்படும். அதோடு மட்டுமின்றி அந்த குடும்பத்துக்கு அரசின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும், வேதனையையும் தெரிவித்து கொள்கிறோம்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின்போது பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூடவேண்டும் என்று உத்தரவிட்டார். அந்த உத்தரவை இனிமேல் அனைவரும் கடை பிடிக்க வேண்டும். அரசுக்கு பொதுமக்களும் தகுந்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுபோன்ற துயர சம்பவங்கள் நடைபெறும்போது மனிதாபிமானத்துடன் பார்க்க வேண்டும். அனைவரும் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். இதில் அரசியல் செய்யக்கூடாது.

மனவேதனை அடைந்தோம்

குழந்தை விழுந்த ஆழ்துளை கிணறு உள்ள பகுதி பாறைகள் நிறைந்த பகுதியா என்று பார்த்து இருக்க வேண்டும் என ஸ்டாலின் கூறுகிறார். அவர் எல்லாம் தெரிந்த விஞ்ஞானியாக இருக்கிறார் என்றால், 2009-ம் ஆண்டு இப்படி ஒரு சம்பவம் நடந்தபோது, அவர் ஏன்? தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. அன்று ஏன்? அவர் ராணுவத்தை அழைக்கவில்லை. ஸ்டாலின் மனசாட்சியை தொட்டு பார்த்து பேச வேண்டும். அரசு மீது அவதூறு பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஸ்டாலின் இவ்வாறு கூறி இருக்கிறார்.

ஆனால் நாங்கள் குழந்தையை உயிருடன் மீட்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தோம். ஆனால் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை என்ற செய்தியை கேட்டு நாங்கள் மிகுந்த மனவேதனை அடைந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் சென்றனர்.

Next Story