‘சுஜித்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’ தாய் உருக்கம்


‘சுஜித்துக்காக  பிரார்த்தனை  செய்த  அனைவருக்கும்  நன்றி’   தாய்  உருக்கம்
x
தினத்தந்தி 29 Oct 2019 11:25 PM GMT (Updated: 29 Oct 2019 11:30 PM GMT)

‘சுஜித்துக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி’, என்று சுஜித்தின் தாய் தெரிவித்தார்.

திருச்சி,

சுஜித்தின் தந்தை பிரிட்டோ ஆரோக்கியராஜ் கூறியதாவது:-

வேண்டிய மக்களுக்கு நன்றி

ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தவுடன் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தோம். தகவல் கிடைத்தவுடன் தீயணைப்பு உள்பட அனைத்து துறையில் இருந்தும் அதிகாரிகள் வந்தனர். 4 நாட்களாக முடிந்த எல்லா உதவிகளையும் அதிகாரிகள் செய்தனர். தீவிரமாக உழைத்தனர். இந்த நடவடிக்கைக்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். என் குழந்தை மீண்டு வர வேண்டிக்கிடந்த அனைவருக்குமே என் நன்றிகள்.

நான் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறேன். எனது மனைவி பிளஸ்-2 வரை படித்துள்ளார். எனது மனைவிக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன். இது குறித்து பரிசீலிப்பதாக கூறியுள்ளார்”.

இவ்வாறு அவர் கூறினார்.

கடைசியாக இருக்க வேண்டும்

சுஜித்தின் தாய் கலாமேரி கூறியதாவது:-

ஆழ்துளை கிணற்றில் விழுந்த என் மகன் அழுதான். அதை நானே பார்த்து துடித்தேன். குழிக்குள் இருந்தபடியே ‘அம்மா... அம்மா...’ என்று என்னை கூப்பிட்டான். ‘அழுவாத சாமி... உன்ன வெளியே தூக்கிடுறேன்’, என்று நானும் சொன்னேன். ஆனால் முடியவில்லை. என் குழந்தைக்காக உலகம் முழுவதிலும் சிறியவர் முதல் பெரியவர் எல்லா தரப்பிலும் இருந்து வேண்டிக்கொண்டு இருந்தீர்கள். உங்கள் அனைவருக்குமே நன்றி. அதிகாரிகள் எல்லாருமே தீவிரமாகத்தான் பணிபுரிந்தார்கள். பாறையாக இருந்ததால் தான் அவர்களால் என் மகனை சீக்கிரம் எடுக்க முடியவில்லை. மற்றபடி மீட்பு பணியில் குறை சொல்லவே முடியாது.

ஆழ்துளை கிணறுகளில் உயிரிழப்பு சம்பவம் தொடர கூடாது. எனது மகனின் இறப்பே கடைசியாக இருக்க வேண்டும். வெயில் மழை பாராது சுஜித்தை உயிருடன் மீட்க வேண்டும் என போராடிய அனைவருக்கும் நன்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

4 மாதத்தில் மீண்டும் நிகழ்ந்த சோகம்

சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு அருகிலேயே திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் உள்ளது. தற்போது அந்த கிணறு வேலி போட்டு மூடி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, அந்த கிணற்றில் பிரிட்டோ ஆரோக்கியராஜின் சகோதரர் (பெரியப்பா மகன்) ஜான்பீட்டர் விழுந்து பலியானது தான் காரணம். ராணுவத்தில் பணியாற்றி வந்த ஜான்பீட்டர் விடுமுறைக்காக ஊருக்கு வந்து இருந்தார். கடந்த மே மாதம் 4-ந் தேதி அவருடைய வீட்டில் வளர்த்து வந்த கோழி ஒன்று திறந்தவெளி கிணற்றுக்குள் விழுந்து விட்டது. அந்த கோழியை உயிருடன் மீட்பதற்காக ஜான்பீட்டர் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். கோழியை மீட்டுவிட்டு கிணற்றில் இருந்து ஏறி வெளியே வந்தபோது, திடீரென கயிறு அறுந்துவிட்டது. இதில் அவர் கிணற்றுக்குள் விழுந்து பலியானார். இதையடுத்து அந்த கிணற்றை வேலி போட்டு மூடி வைத்துவிட்டனர். அந்த கிணற்றின் அருகில் 10 அடி தூரத்தில் தான் சுஜித் விழுந்த ஆழ்துளை கிணறு உள்ளது. திறந்தவெளி கிணற்றை மூடியவர்கள் ஆழ்துளை கிணற்றை கவனிக்க தவறிவிட்டனர். இந்த நிலையில் 4 மாதத்துக்கு பிறகு அங்கு மீண்டும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மயக்கம் அடைந்த தாய்க்கு சிகிச்சை

குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் கடந்த 25-ந் தேதி மாலை விழுந்தான். இதையடுத்து சுஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது குழந்தையின் தாய் கலாமேரி அங்கு அமர்ந்து அழுது கொண்டே இருந்தார். எப்படியாவது தனது குழந்தையை மீட்டு தர மாட்டார்களா? என்ற ஏக்கத்துடன் 4 நாட்களாக சரியாக சாப்பிடக்கூட இல்லை. இதனால் கலாமேரி சோர்வடைந்தார். இறுதியாக சுஜித் பிணமாக மீட்கப்பட்டதை கண்டு கண்ணீர்விட்டு கதறி அழுதார். இதில் கலாமேரிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. வீட்டில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவருக்கு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். வீட்டிலேயே கலாமேரிக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. சுஜித்தின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வந்த அரசியல் கட்சியினர் வீட்டில் சிகிச்சையுடன் படுத்து இருந்த கலாமேரியிடம் ஆறுதல் கூறிவிட்டு சென்றனர்.

ஆழ்துளை கிணறு சிமெண்டு கலவையால் மூடப்பட்டது

குழந்தை சுஜித் விழுந்து இறந்த ஆழ்துளை கிணறு மற்றும் அதன் அருகே தோண்டப்பட்ட பள்ளம் ஆகியவற்றை சுஜித்தின் உடலை மீட்டதும் உடனே மூட வேண்டும் என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை ஆழ்துளை கிணற்றை மூடும் பணி தொடங்கியது. இதற்காக ஜல்லிக்கற்கள் மற்றும் சிமெண்டு கான்கிரீட் கலவை ஆகியவை 3 லாரிகளில் கொண்டு வரப்பட்டன. பின்னர் சுஜித் விழுந்த 6 அங்குலம் உள்ள ஆழ்துளை கிணற்றில் சிமெண்டு கலவையை கொட்டி மூடப்பட்டது. அடுத்ததாக புதிதாக தோண்டப்பட்ட குழியும் மூடப்பட்டது.

தம்பியின் உடலை சோகத்துடன் பார்த்த அண்ணன்

பிரிட்டோ ஆரோக்கியராஜ்-கலாமேரி தம்பதிக்கு புனித்ரோசன், சுஜித் வில்சன் ஆகிய 2 மகன்கள். இவர்கள் குழந்தைகள் இருவரும் வீட்டின் அருகே சோளம் பயிரிடப்பட்ட தோட்டத்தில் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது தான் எதிர்பாராதவிதமாக சுஜித் வில்சன் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்ததில் இருந்தே மூத்த மகன் புனித்ரோசனை தனது அரவணைப்பில் தாய் கலாமேரி வைத்து இருந்தார். அதன்பிறகு புனித்ரோசனை உறவினர்கள் பார்த்து கொண்டனர். தம்பி வந்துவிடுவானா என அடிக்கடி அத்தை, மாமாவிடம் புனித்ரோசன் கேட்டு வந்துள்ளான். நிச்சயம் கொஞ்சநேரத்தில் வந்துவிடுவான் என்று கூறி அவர்கள் ஆறுதல் கூறி வந்தனர். ஆனால் சுஜித் பிணமாக மீட்கப்பட்டதை கண்டு அழுத புனித்ரோசன், சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்ட தம்பியின் உடலை சோகத்துடன் பார்த்தபடி அருகிலேயே நின்று இருந்தான்.

Next Story