வருகிற 7-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது கமல்ஹாசனின் 60 ஆண்டு கால கலை பயணத்தின் கொண்டாட்டம்


வருகிற 7-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது கமல்ஹாசனின் 60 ஆண்டு கால கலை பயணத்தின் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 30 Oct 2019 11:09 PM GMT (Updated: 30 Oct 2019 11:09 PM GMT)

கமல்ஹாசனின் 60 ஆண்டு கால கலை பயணத்தின் கொண்டாட்டம் வருகிற 7-ந்தேதி தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.

சென்னை, 

இந்திய திரையுலகத்தில் நீண்ட நெடிய பயணத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் வாழ்வும், அர்ப்பணிப்பும் 60 வருடங்களாக இருப்பது பெரிய பங்களிப்பாகும். கமல்ஹாசனின் இந்த ஈடு, இணையற்ற கலை பயணத்தை கொண்டாடும் விதமாக வருகிற 7, 8 மற்றும் 9-ந்தேதிகளில் ஒரு தொடர் கொண்டாட்டமாக, கமல்ஹாசனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவிக்கிறது.

கமல்ஹாசன் பிறந்த தினமே அவருடைய தந்தையாரும், சுதந்திர போராட்ட வீரரும், வக்கீலுமான டி.சீனிவாசனின் நினைவு தினமும் ஆகும். எனவே அன்றைய தினம் கமல்ஹாசன், அவருடைய தந்தையார் திருஉருவச்சிலையை சொந்த ஊரான பரமக்குடியில் தனது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் காலை 10.30 மணிக்கு திறக்க உள்ளார்.

பாலச்சந்தர் உருவச்சிலை

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே.சாலையில் உள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் 8-ந்தேதி காலை 9.30 மணிக்கு கமல்ஹாசன் தனது கலை உலக குருவான பாலச்சந்தரின் திருஉருவச்சிலையை திறக்க உள்ளார். இதில் பாலச்சந்தரின் குடும்பத்தினரும், திரையுலகை சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொள்கிறார்கள்.

மேலும் அன்றைய தினம் கமல்ஹாசனின் இயக்கத்தில் வெளியான ‘ஹே ராம்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி சென்னை சத்யம் தியேட்டரில் மதியம் 3.30 மணிக்கு திரையிடப்பட உள்ளது. அப்போது திரையுலக பிரமுகர்கள் மற்றும் ஊடகத்தினருடன் அந்த திரைப்படம் குறித்து கமல்ஹாசன் கலந்துரையாடுகிறார்.

இசை நிகழ்ச்சி

கமல்ஹாசனின் 60 ஆண்டுகால கலை பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னையில் 9-ந்தேதி இசைஞானி இளையராஜாவின் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கமல்ஹாசனுடன் ஏறத்தாழ 44 ஆண்டுகள் இணைந்து பயணித்த அவருடைய நண்பர் நடிகர் ரஜினிகாந்த், பல்வேறு திரையுலக முக்கிய பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த இசை விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது.

மேற்கண்ட தகவல் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி நாராயணன் வள்ளியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story