போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - விஜயபாஸ்கர் உத்தரவு


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் - விஜயபாஸ்கர் உத்தரவு
x
தினத்தந்தி 31 Oct 2019 12:33 PM GMT (Updated: 31 Oct 2019 12:33 PM GMT)

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை,

சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும். பணிக்கு திரும்பாத மருத்துவர்களின் இடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்கப்படும்.  

புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மருத்துவர்களுடன் துறை செயலரும், நானும் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். போராட்டத்தை கைவிட்டு வந்தால் மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. 

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2,160 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். விழுப்புரம், கடலூர், திருப்பூர், நெல்லையில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பிவிட்டனர்.  

மொத்தம் 16,475 மருத்துவர்களில் 2,523 பேர் மட்டும் தான் இதுவரை கையெழுத்திடவில்லை. போராட்டம் நடத்துவதற்கு அரசு மருத்துவமனை உகந்த இடம் இல்லை. பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story