கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை


கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு தூக்கு தண்டனை
x
தினத்தந்தி 27 Dec 2019 10:06 AM GMT (Updated: 27 Dec 2019 10:06 AM GMT)

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.

கோவை,

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். கடந்த  மார்ச் 25-ந் தேதி மாலையில் வீட்டின் முன்பு விளையாடிய சிறுமி மாயமானாள். எங்கு தேடியும் கிடைக்காத சிறுமி 27 ந்தேதி  வீட்டின் எதிர்புறம் உள்ள சந்தில் உடலில் டி-சர்ட்டினால் சுற்றப்பட்டு பிணமாக கிடந்தாள்.

இதில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று உடலை வீசிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீசார் 100-க்கும் மேற்பட்டோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 34) உள்பட 7 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் சந்தோஷ்குமார் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். உடனே போலீசார் அவரை கைது செய்தனர். கைதான சந்தோஷ்குமார் வீட்டு உள் அலங்கார வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவரது நடவடிக்கை பிடிக்காமல் திருமணமான ஒரு மாதத்திலேயே மனைவி பிரிந்து சென்று விட்டார்.

இந்த, பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை மகளிர் நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.  பின்னர், கடந்த 18ந்தேதி தொடங்கப்பட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் வாதங்கள் முடிவடைந்த நிலையில்  இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என நீதிபதி ராதா இன்று காலை தீர்ப்பு அளித்தார்.

தண்டனை விவரம்  மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. சந்தோஷ்குமாருக்கு 302 பிரிவின் கீழ் தூக்கு தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் அவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி ராதா தீர்ப்பு வழங்கினார்.

Next Story