தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது


தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு தொடங்கியது
x
தினத்தந்தி 30 Dec 2019 1:37 AM GMT (Updated: 30 Dec 2019 1:37 AM GMT)

தமிழகத்தில் 2வது கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது.

சென்னை,

தமிழகத்தில் சென்னை உள்பட 10 மாவட்டங்களை தவிர்த்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 91 ஆயிரத்து 975 பதவி இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37 ஆயிரத்து 830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 700 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 45 ஆயிரத்து 336 பதவி இடங்களுக்கான முதற்கட்ட தேர்தல் கடந்த 27-ந்தேதி நடைபெற்றது. 24 ஆயிரத்து 680 வாக்குச்சாவடிகளில் நடந்த வாக்குப்பதிவில் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவானது.

இந்தநிலையில் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4 ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள் என மொத்தம் 46 ஆயிரத்து 639 பதவி இடங்களுக்கான 2-ம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் 1 கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களாக உள்ளனர். 4 பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், ஒவ்வொரு வாக்காளர்களும் தலா 4 வாக்குகள் பதிவு செய்ய வேண்டும்.

இதேபோன்று, கடம்பத்தூர் ஒன்றியத்தில் முதற்கட்ட தேர்தலின்போது, சூறையாடப்பட்ட வாக்குசாவடி எண் 83 மற்றும் 84 ஆகிய 2 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தலை விட 2-ம் கட்ட தேர்தலில் பதவி இடங்கள் அதிகம் உள்ளன. எனவே வாக்குப்பெட்டிகள், வாக்குச்சாவடி மையங்கள், போலீஸ் பாதுகாப்பு ஆகியவை அதிகரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி வாக்குப்பதிவுக்கு 93 ஆயிரம் வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. 25 ஆயிரத்து 8 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் என 61 ஆயிரத்து 4 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை வருகிற 2ந்தேதி 310 மையங்களில் நடைபெற உள்ளது.

Next Story