ரூ.1.62 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போலீசில் ஆஜர்


ரூ.1.62 கோடி மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போலீசில் ஆஜர்
x
தினத்தந்தி 14 Feb 2020 11:30 PM GMT (Updated: 2020-02-15T04:46:37+05:30)

ரூ.1.62 கோடி மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை, 

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக் கும் செந்தில் பாலாஜி கடந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை அ.தி.மு.க. அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் பணம் வாங்கிக்கொண்டு ரூ.1 கோடியே 62 லட்சம் மோசடி செய்துவிட்டதாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இதைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி கடந்த 2017-ம் ஆண்டு முன்ஜாமீன் பெற்றார். இதையடுத்து இந்த வழக்கு எந்தவித முன்னேற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான அருண்குமார் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “எழும்பூர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி மற்றும் வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் கள் பெயர்கள் இடம் பெறவில்லை. எனவே உரிய முறையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கை உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், 6 மாதத்துக்குள் மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவையடுத்து செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கோர்ட்டில் அனுமதி பெற்று செந்தில் பாலாஜிக்கு சொந்தமான கரூரில் உள்ள அவரது வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவரது டெக்ஸ்டைல் நிறுவனம் உள்பட 17 இடங்களில் கடந்த 31-ந் தேதி சோதனை நடத்தினர்.

சென்னை மந்தைவெளி திருவேங்கடம் தெரு விரிவாக்கத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு பூட்டிக்கிடந்ததால் அந்த வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.

பின்னர் கடந்த 6-ந் தேதி மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ராமச்சந்திரமூர்த்தி தலைமையில் தனிப்படை போலீசார் மந்தைவெளி திருவேங்கடம் தெரு விரிவாக்கத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டின் சீலை அகற்றி சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் தன்னை கைது செய்யாமல் இருக்க செந்தில் பாலாஜி சென்னை ஐகோர்ட்டில் நிபந்தனையுடன் மீண்டும் முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு செந்தில் பாலாஜிக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜரானார். இதற்காக அவர் நேற்று காலை 9.30 மணி அளவில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். நேற்று மதியம் 1.30 மணி வரை செந்தில் பாலாஜியிடம் முதல்கட்ட விசாரணை நடந்தது. பின்னர் அவர் மதிய உணவுக்காக வெளியில் சென்றார். மீண்டும் அவர் நேற்று மாலையில் விசாரணைக்காக ஆஜரானார். நேற்று மாலையிலும் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, நேற்று மதியம் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த வழக்கில் முதலில் என்னுடைய பெயர் சேர்க்கப்படவில்லை. தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு எனது பெயரை இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். விசாரணையின்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேட்ட கேள்விகளுக்கு நான் முறையாக பதில் அளித்துள்ளேன்.

எத்தனை முறை விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராவேன். வரப்போகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story