திருச்செந்தூரில் திறக்கப்பட உள்ள மணிமண்டபம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பெருமையை பறைசாற்றும் - கே.எஸ்.அழகிரி வாழ்த்து


திருச்செந்தூரில் திறக்கப்பட உள்ள மணிமண்டபம் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பெருமையை பறைசாற்றும் - கே.எஸ்.அழகிரி வாழ்த்து
x
தினத்தந்தி 19 Feb 2020 11:30 PM GMT (Updated: 19 Feb 2020 10:50 PM GMT)

திருச்செந்தூரில் திறக்கப்பட உள்ள டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் மணிமண்டபம், அவருடைய பெருமையை பறைசாற்றும் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை, 

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறக்கப்பட உள்ளதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

பத்திரிகை, கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்த பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தமிழக அரசு திருச்செந்தூரில் மணிமண்டபம் அமைப்பது மிகுந்த பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது. இதில் பூங்கா, நூலகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட இருப்பது மிகுந்த பொருத்தமானதாகும். இந்த மணிமண்டபத்தின் திறப்பு விழா வருகிற 22-ந் தேதி நடைபெற இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும்.

தமிழக பத்திரிகை வரலாற்றில் உயர்தட்டு மக்களால் மட்டுமே வாசிக்கப்பட்டு வந்த நிலையை முற்றிலும் மாற்றி, அடித்தட்டு மக்களும் வாசிக்கக் கூடிய அளவில் தினத்தந்தி நாளேட்டை நடத்தியவர் நிறுவனர் சி.பா.ஆதித்தனார். 1942-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தினத்தந்தி நாளேடு 3 நகரங்களில் வெளிவந்து கொண் டிருந்தது. சி.பா.ஆதித்தனார் மறைவிற்கு பிறகு, படிப்படியாக 13 நகரங்களில் தினத்தந்தி பதிப்புகளை வெளியிட்டவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். தினத்தந்தி, மாலை மலர், ராணி என பல்வேறு வெளியீடுளையும், இதனை தொடர்ந்து தந்தி தொலைக்காட்சியையும் தினத்தந்தி குழுமம் மிகச் சிறப்பாக நடத்தி வருகிறது.

மறைந்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரை அனைவரும் சின்ன அய்யா என்று தான் அன்போடு அழைப்பார்கள். மிகுந்த தயாள குணம் கொண்ட அவர் ‘ஒரு கை கொடுப்பதை மறு கை அறியாமல்’ கொடுத்தவர். அவரிடம் உதவி பெற்றவர்கள் ஏராளம். பத்திரிகையாளரான அவர் ஆன்மிகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தென்காசியில் 200 ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் கவனிப்பாரற்று கிடந்த 178 அடி உயரமுள்ள காசி விஸ்வநாதர் கோவிலை புதுப்பிக்கிற முழு செலவையும் அவரே ஏற்று, குடமுழுக்கு விழாவை மிகச் சிறப்பாக நடத்தியவர்.

மேலும், விளையாட்டுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அகில இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக 1987 முதல் 1996 வரை பொறுப்பு வகித்தவர். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் தனி முத்திரை பதித்தவர். அதுபோல, சர்வதேச கைப்பந்து சங்கம் மற்றும் இந்திய கைப்பந்து சங்கத்தின் தலைமை பொறுப்புகளையும் வகித்தவர். தமிழகத்தில் கைப்பந்து விளையாட்டை ஊக்கப்படுத்தியவர். ஆதித்தனார் கல்லூரியில் கைப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை அமைத்து பல்வேறு போட்டிகள் நடைபெறுவதற்கு ஆதரவாக இருந்தவர்.

இந்திய மொழிகளில் வெளிவருகிற நாளேடுகளில் ஒரு கோடிக்கும் மேலாக வாசகர்களை கொண்டு சாதனை படைத்தது தினத்தந்தி நாளேடு. இந்த சாதனைகளை நிகழ்த்தியவர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். தமிழகத்தில், எத்தனையோ நாளேடுகள் வெளிவருகின்றன. ஆனால் அனைத்து அரசியல் கட்சிகளின் செய்தி களையும், பாரபட்சமில்லாமல் உள்ளதை உள்ளபடியே வெளியிடுகிற கொள்கை கொண்ட நாளேடு தினத்தந்தி. தமது கருத்துகளை செய்திகளோடு சேர்த்து வெளியிடாத, பத்திரிகை தர்மத்தை தினத்தந்தி கொண்டிருக்கிறது. வாசகர்களுக்கு செய்தியை தான் சொல்ல வேண்டுமே தவிர, தினத்தந்தியின் கருத்தை சேர்த்து சொல்லக்கூடாது என்கிற கொள்கை தான் தினத்தந்தி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.

நீண்டகாலமாக தினத்தந்தியில் தலையங்கம் வெளியிடுவதில்லை. ஆனால் சமீபகாலமாக தலையங்கங்கள் வெளிவருகின்றன. ஆனால் அந்த தலையங்கங்கள் கூட சார்பு நிலை இல்லாமல், நடுநிலையோடு வெளிவருவது மிகுந்த பாராட்டுக்குரியது. எனவே தமிழக மக்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த தினத்தந்தி நாளேட்டை வளர்த்தெடுத்த பெருமை டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு உண்டு. அவரது பெருமையை பறைசாற்றுகிற வகையில் அவரது மணி மண்டபம் அமையும். அவர் புகழ் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story