சென்னை-பெங்களூரு வழித்தடம் கொச்சி வரை நீட்டிப்பு; நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் தொழில் மையங்கள் - முதன்மை செயலாளர் தகவல்


சென்னை-பெங்களூரு வழித்தடம் கொச்சி வரை நீட்டிப்பு; நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் தொழில் மையங்கள் - முதன்மை செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 21 Feb 2020 10:15 PM GMT (Updated: 21 Feb 2020 10:11 PM GMT)

சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடம் கொச்சி வரை நீட்டிக்கப்பட உள்ளதாகவும், நெல்லை, தூத்துக்குடி உள்பட 5 மாவட்டங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்படும் என்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் தொழில்துறை முதன்மை செயலாளர் நா.முருகானந்தம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை, 

சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்தை பொறுத்தவரையிலும், மத்திய அரசு நிதி அளிக்கிறது. தமிழக அரசு அந்த திட்டத்துக்கு செயல்படுத்துவதற்கு தேவையான நிலத்தை வழங்குகிறது. சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடத்தை கேரள மாநிலம் கொச்சி வரையிலும் நீட்டிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக பொன்னேரியில் அமைக்கப்பட்டுள்ளது போன்று, ஓசூரிலும் தொழில் மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான திட்டமிடல் பணி நிறைவடைந்துவிட்டது. இந்த தொழில் மையம் மூலமாக கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதோடு, குடியிருப்பு வசதிகள் தொடர்பான திட்டங்களும் மேம்படுத்தப்படும்.

சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடம் கொச்சி வரை நீட்டிக்கப்படுவதால் தர்மபுரி, சேலம், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்கள் பயன்பெறும். சென்னை-பெங்களூரு தொழில் வழித்தடம் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை இணைக்கும். சென்னையில் இருந்து இந்த தொழில் வழித்தடம் கொச்சி வரை நீட்டிக்கப்படும்போது, தமிழகத்தில் கன்னியாகுமரி வரை உள்ள பல மாவட்டங்களை இணைக்கும்.

இதற்காக தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தொழில் மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக சாலைகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலை துறைக்கு ரூ.4 ஆயிரம் கோடியும், மின் அமைப்புகளை மாற்றுவதற் காக மின்துறைக்கு ரூ.6 ஆயிரம் கோடியும் அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story