ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு


ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு விருந்து: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு
x
தினத்தந்தி 24 Feb 2020 12:15 AM GMT (Updated: 24 Feb 2020 12:00 AM GMT)

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வரும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அளிக்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவியுடன் 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு மாநில முதல்-அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், விருந்தில் கலந்துகொள்வதற்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சி மற்றும் மாலையில் எடப்பாடியில் நடைபெறும் நிகழ்ச்சி ஆகியவற்றில் பங்கேற்கும் எடப்பாடி பழனிசாமி, டிரம்புக்கு அளிக்கப்படும் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று இரவு அல்லது நாளை காலை டெல்லி புறப்பட்டு செல்லலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story