மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது குறித்து அதிகாரிகள் கூட்டத்தில் விவாதித்த விவரங்கள் என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது குறித்து அதிகாரிகள் கூட்டத்தில் விவாதித்த விவரங்கள் என்ன? - அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Feb 2020 8:30 PM GMT (Updated: 25 Feb 2020 5:42 PM GMT)

மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது குறித்து அதிகாரிகள் குழு கூட்டத்தில் விவாதித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

உலக புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தை அழகுபடுத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், ஐகோர்ட்டு, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரே‌‌ஷ்குமார், மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய தமிழக சுற்றுலாத்துறை செயலாளர், நிதித்துறை செயலாளர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை இயக்குனர் அடங்கிய குழுவை அமைத்து உத்தரவிட்டனர். மேலும், இந்த குழு கூடி விவாதித்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுற்றுலாத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளை முறைப்படுத்துவது தொடர்பாகவும், வழிகாட்டிகளுக்கு விதிமுறைகள் வகுக்க இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவையான நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட மத்திய-மாநில அரசு அதிகாரிகளின் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றதாகவும், அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன், நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர, தொல்லியல்துறை அல்ல என குறிப்பிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மாமல்லபுரத்தை அழகுபடுத்த தேவைப்படும் நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதம் (மார்ச்) 11-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Next Story