தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் ஜி.எஸ்.டி., கலால் வரி தலைமை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணா ராவ் பொறுப்பு ஏற்பு


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் ஜி.எஸ்.டி., கலால் வரி தலைமை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணா ராவ் பொறுப்பு ஏற்பு
x
தினத்தந்தி 19 March 2020 9:00 PM GMT (Updated: 19 March 2020 8:52 PM GMT)

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் ஜி.எஸ்.டி., கலால் வரி தலைமை கமிஷனராக ஜி.வி.கிருஷ்ணா ராவ் பொறுப்பேற்றார்.

சென்னை, 

இந்திய வருவாய் சேவைகள் 1987-ம் ஆண்டு அணியை சேர்ந்த ஜி.வி.கிருஷ்ணா ராவ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் மத்திய கலால் வரி மற்றும் மத்திய ஜி.எஸ்.டி. தலைமை கமிஷனராக நேற்று பொறுப்பு ஏற்றார். ஆந்திர பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு முடித்த, இவர் ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. மற்றும் எல்.எல்.பி. படிப்புகளையும் படித்துள்ளார். இதுதவிர சைபர் சட்டம் மற்றும் அறிவுசார் சொத்துரிமை படிப்பில் முதுகலை பட்டயப்படிப்பும், இதழியல் மற்றும் ஜோதிடத்தில் முதுகலை படிப்பும் நிறைவு செய்திருக்கிறார்.

மைசூரில் கமிஷனர் மற்றும் முதன்மை கமிஷனராக இருந்தபோது ஜி.எஸ்.டி.யை கடந்த 2017-ம் ஆண்டு வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கான கருவியாக திகழ்ந்துள்ளார். ஜி.வி.கிருஷ்ணா ராவ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலத்தின் ஜி.எஸ்.டி. தலைமை கமிஷனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, கவுகாத்தியில் செயல்பட்டு வரும் 7 வடகிழக்கு மாநிலங்களின் சுங்கம் மற்றும் ஜி.எஸ்.டி.யின் தலைமை கமிஷனராக இருந்தார்.

1998-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2005-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை மத்திய கலால் மற்றும் சுங்கத்துறையில் சென்னையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். இதனால் இந்த பகுதியை நன்கு அறிந்தவர். அவருடைய இந்த பொறுப்பில், வரி செலுத்துபவர்களுக்கான சேவைகள், வருவாயை மேம்படுத்துதல் மற்றும் பணியாளர் நலன் உள்ளிட்ட விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது.

மேற்கண்ட தகவல் மத்திய கலால் மற்றும் ஜி.எஸ்.டி. முதன்மை தலைமை கமிஷனர் அலுவலகத்தின் கூடுதல் கமிஷனர் பி.செந்தில்வேலவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story