தமிழக மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் 530 மருத்துவர்கள் நியமனம்; முதல் அமைச்சர் அறிவிப்பு


தமிழக மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் 530 மருத்துவர்கள் நியமனம்; முதல் அமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 27 March 2020 9:11 AM GMT (Updated: 27 March 2020 9:45 AM GMT)

தமிழக மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் 530 மருத்துவர்களை நியமித்து முதல் அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்தில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது.

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது.  இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது.  மதுரை, ஈரோடு, சென்னையை சேர்ந்த தலா 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

தமிழக விமான நிலையங்களில் இதுவரை 2 லட்சத்து 9 ஆயிரத்து 284 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 15 ஆயிரத்து 788 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 86 ஆயிரத்து 644 பேரின் தகவல்கள் குடியுரிமை ஆணையத்திடம் இருந்து பெறப்பட்டு அவர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு உள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  இதனால் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.  இதன் ஒரு பகுதியாக, தமிழக மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் 530 மருத்துவர்களை நியமித்து முதல் அமைச்சர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதேபோன்று 1,000 செவிலியர்கள், 1,508 லேப் டெக்னீசியன்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் அனைவரும் 3 தினங்களில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

புதியதாக 200 ஆம்புலன்ஸ்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் முதல் அமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

Next Story