காணொலி காட்சி மூலம் எப்.எம்.வானொலி நிலைய அதிபர்களுடன் நரேந்திர மோடி கலந்துரையாடல் - பா.ஆதவன் ஆதித்தன் பங்கேற்பு


காணொலி காட்சி மூலம் எப்.எம்.வானொலி நிலைய அதிபர்களுடன் நரேந்திர மோடி கலந்துரையாடல் - பா.ஆதவன் ஆதித்தன் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 March 2020 12:00 AM GMT (Updated: 27 March 2020 9:12 PM GMT)

இந்தியா முழுவதிலும் உள்ள முக்கியமான எப்.எம்.வானொலி அதிபர்களுடன் பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் நடத்திய கலந்துரையாடலில் ஹலோ எப்.எம். இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் பங்கேற்றார்.

சென்னை, 

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க தேவையான விழிப்புணர்வை மக்களிடம் எடுத்துச் செல்ல ஒத்துழைப்பு கோரியும், மத்திய அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகளை விளக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலை இந்தியா முழுவதிலும் உள்ள முக்கியமான எப்.எம் வானொலி அதிபர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்களுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நடத்தினார்.

இதில் தமிழ்நாட்டில் 10 ஒலிபரப்பு நிலையங்களை கொண்ட ஹலோ எப்.எம். இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் பங்கேற்றார். அவருடன் தலைமைச் செயல் அதிகாரி ராஜீவ் நம்பியார், நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:-

வானொலி நிகழ்ச்சிகள் பரவலாக சென்றடைவதால் அதைக் கேட்கும் லட்சக்கணக்கான இந்திய குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களைப்போல நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உள்ளனர்.

எனவே நிபுணர்கள் கருத்துக்கள், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் ஆகியவைகள் பற்றிய செய்திகளை பரப்புவதுடன் நின்றுவிடாமல், கொரோனாவால் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், சவால்கள் குறித்த கருத்துக்களை அரசுக்கு தெரிவித்தால், அரசு தாமாகவே முன்வந்து அதை தீர்க்க நடவடிக்கை எடுக்க முடியும்.

நேர்மறையான செய்திகள், மாதிரி ஆய்வு சார்ந்த செய்திகள் குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முற்றிலுமாக குணமடைந்து மீண்டவர்களின் விவரங்களை நாடெங்கிலும் சென்று சேர்த்தால் நாம் ஒன்றாக செயல்பட முடியும்.

காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் போன்ற உள்ளூர் கதாநாயகர்களின் பங்களிப்பை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சிகள் அமைக்கப்பட வேண்டும்.

பொதுமக்கள் காவல்துறையினருடன் ஒத்துழைக்க வேண்டும். அதேசமயத்தில் காவல்துறையினர் பலப்பிரயோகம் செய்வதை தவிர்க்க வேண்டும். உலகளாவிய கொரோனா நோய் தொற்றை எதிர்ப்பதில் 130 கோடி இந்தியர்களும் தொண்டர்களாக செயல்பட வேண்டும்.

சமூக இடைவெளி, சுயமாக தனிமைப்படுத்துவது பற்றி வானொலியில் எடுத்துக்கூற வேண்டும். வதந்திகளை கட்டுப்படுத்துவதில் உதவ வேண்டும். சமுதாயத்தில் ஆக்கப்பூர்வ, மற்றும் நேர்மறை மனப்பான்மை ஏற்பட வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் உழைக்க வேண்டும்.

மேற்கண்டவாறு பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.

Next Story