கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ‘காணொலிக்காட்சி’ மூலம் ஆலோசனை - முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களுடன் ‘காணொலிக்காட்சி’ மூலம் ஆலோசனை - முதல்-அமைச்சருக்கு, மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 March 2020 11:15 PM GMT (Updated: 28 March 2020 9:55 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சி தலைவர்களுடன், முதல்-அமைச்சர் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா எனும் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் மனதில் உள்ள பதற்றத்தை தணித்து, ஆழ்ந்த நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான இந்த பணியில் ஆளுங்கட்சி மட்டுமின்றி, அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஈடுபடுவதுதான் சிறப்பாக இருக்கும்.

வெகுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய இந்த பேரிடரை ஆளுங்கட்சி மட்டும் தனித்து நின்று துடைத்துவிட முடியாது. அனைத்து கட்சிகளும் ஒரே நோக்குடன் ஒன்றுபட்டு ஈடுபடவேண்டிய தருணம் இது. ஆகவே, அனைத்துக்கட்சி தலைவர்களின் கூட்டத்தை உடனடியாக கூட்டவேண்டும் என்று முதல்- அமைச்சர் பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படி ஒரு கூட்டத்தை கூட்டுவதில் பிரச்சினை இருக்கும் என்றால், அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ‘வீடியோ கான்பரன்ஸ்’ (காணொலிக்காட்சி) மூலம் கலந்து ஆலோசனை நடத்துவதற்கான ஒரு ஏற்பாட்டினை செய்து கொண்டு மாநிலம் முழுவதும் நிலவும் உண்மை நிலையை அறிந்து கொரோனா தடுப்புக்கு, ஜனநாயக ரீதியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் முதல்-அமைச்சர் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், சென்னையில் தவித்த மேற்கு வங்காளத்தை சேர்ந்த 40 தொழிலாளர்களுக்கு உதவ வேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொடர்பு கொண்டு தெரிவித்தார். இதையடுத்து அந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்பட்டன.

இதற்கு டெரிக் ஓ பிரையன் டுவிட்டரில் நன்றி தெரிவித்தார். இதற்கு பதில் அளித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில், “டெரிக் ஓ பிரையன் மற்றும் மம்தா பானர்ஜிக்கு எனது நன்றியை தெரிவிக்கிறேன். இதுபோன்ற காலங்களில் அனைத்து மாநிலங்களும் எல்லைகள், கட்சி சார்புகளை கடந்து பாதிப்புக்குள்ளாக கூடியவர்களுக்கு உதவவேண்டும்’ என கூறியுள்ளார்.

இந்தநிலையில், குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக 3 பேர் மரணம் அடைந்ததாக வந்த செய்தியை தொடர்ந்து, தலைமைச் செயலாளர் க.சண்முகத்தை, மு.க.ஸ்டாலின் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டார்.

இதற்கு தலைமைச் செயலாளர், “சுகாதாரத்துறை செயலாளர் மூலம் விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும்” என்று கூறினார்.

Next Story