தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் பேட்டி


தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் பேட்டி
x
தினத்தந்தி 12 Aug 2020 10:43 PM GMT (Updated: 12 Aug 2020 10:43 PM GMT)

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமை செயலாளர் சண்முகம் பேட்டி அளித்தார்.

வண்டலூர், 

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவற்கு தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், அரசு முதன்மை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் ஜே.கே.திரிபாதி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் உள்பட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டம் முடிந்த பிறகு தலைமை செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்த மாவட்டங்களுக்கு நான் மற்றும் சுகாதார செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி, டி.ஜி.பி. ஆகியோர் நேரில் சென்று மாவட்டங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை குறித்தும், இனிமேல் எப்படிப்பட்ட மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கிறோம்.

இந்த கூட்டத்தில் விவாதிக்கும் போது மாவட்ட நிர்வாகம் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்திருப்பது தெரியவந்தது. குறிப்பாக சில அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளோம். அடுத்த 4 அல்லது 5 நாட்களில் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகமாக கொரோனா தொற்று உள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீடு தோறும் நேரில் இலவசமாக முக கவசம் வழங்குவதற்கு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த நபர்களை தீவிரமாக கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் எப்படி ஒவ்வொரு தெருவிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அதிக அளவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் முகாம்கள் நடைபெறும்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இன்றைய ஆய்வு கூட்டம் மிகவும் திருப்தியாக உள்ளது. நல்ல நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நோய் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மாநில அளவில் சிறப்பு குழுக்களை அனுப்புவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்லாவரம், தாம்பரம், மறைமலைநகர் பகுதியில்தான் அதிக அளவு கொரோனா தொற்று உள்ளது. கொரோனா தொற்று பரிசோதனை செய்தவர்கள் முடிவுக்கு 2 நாட்கள் கூட காத்திருக்க தேவையில்லை, அதற்கு முன்னதாகவே பரிசோதனை முடிவுகள் வந்துவிடும், கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவுகளை வழங்குவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு தருவதில்லை, நாம் எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை, முக கவசம் அணிவது இல்லை, வேலை செய்யும் இடங்களில் கூட்டமாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். கொரோனா உயிரிழப்புகளை மறைப்பது கிடையாது.

தொழிற்சாலை நிர்வாகம் ஊழியர்களுக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் சோதனை செய்த பிறகு பணிக்கு அனுப்ப அனுமதிக்க வேண்டும். தொழிற்சாலைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? உணவு சாப்பிடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா? என்று கண்காணிக்க வேண்டும். தமிழக அரசின் வழிமுறைகளை பின்பற்றாத தொழிற்சாலைகளை மூடுவது போன்ற கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் போகும்போது இ-பாஸ் நடைமுறை தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story