மாநில செய்திகள்

குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தடையின்றி நிறைவேற்ற நடவடிக்கை - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் + "||" + Equal rights of women in family property: Action to enforce Supreme Court ruling without restraint - MK Stalin's appeal to Central Government

குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தடையின்றி நிறைவேற்ற நடவடிக்கை - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை: சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தடையின்றி நிறைவேற்ற நடவடிக்கை - மத்திய அரசுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு, எனும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மத்திய அரசு தடையின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, 

குடும்ப சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு, எனும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மத்திய அரசு தடையின்றி நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குடும்ப சொத்தில் பெண்களுக்கான சம உரிமை வழங்கும் சட்டம், கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் முத்தாய்ப்பான திட்டமாகும். வர்ணாசிரமம், மனுஸ்மிருதி போன்றவற்றை காரணம் காட்டி பெண்களுக்கான சொத்துரிமை காலம் காலமாக மறுக்கப்பட்டு வந்த சமுதாயத்தில், ஆணுக்கு இணையாகப் பெண்களுக்கும் அந்த உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற குரலைச் சீர்திருத்தச் சிந்தனையாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

பல தடைகளைக் கடந்து 1956-ம் ஆண்டில் இந்து வாரிசுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது முழுமையானதாக நிறைவேற்றப்படவில்லை. குடும்பச் சொத்தில் பெண்களுக்கு உரிமைகள் வழங்குவதில் பல சிக்கல்கள் நீடித்தன. ஓர் ஆணின் தனிச்சொத்தில் பெண்களுக்கு உரிமைகள் கிடைத்தாலும், பரம்பரைக் குடும்பச் சொத்தில் பெண்களுக்கான பங்கு கிடைப்பதற்கு தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.

இந்நிலையில்தான், 1989-ல் பரம்பரை குடும்பச்சொத்தில் மகன்களுக்கு இருக்கும் உரிமை போலவே, மகள்களுக்கும் உண்டு என்பதை சட்டமாக்கி, பெண்களுக்கு சம உரிமை வழங்கினார் கருணாநிதி. ‘பங்காளி’ என்றால் அது ஆண்களுக்கு மட்டுமே உரிய சொல்லாக இருந்து வந்த நிலையில், குடும்பச் சொத்து எனும் பங்கை ஆள்வதில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்கிற சட்டத்தின் மூலம் அவர்களையும் ‘பங்காளி’ ஆக்கி, ஆண்டாண்டு காலப் பழியைத் துடைத்தெறிந்தவர் கருணாநிதி.

பெண்களுக்கான குடும்பச் சொத்துரிமை குறித்த விவாதங்கள் இந்திய அளவில் தொடர்ந்து நடைபெற்று வந்த சூழலில்தான், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் கடந்த 11-ந்தேதி மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள். அதில், ‘இந்து கூட்டுக்குடும்பச் சொத்தில் மகன்களைப் போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு. அந்த உரிமையை யாரும் மறுக்க முடியாது’, என நீதிபதிகள் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

பெரியாரும், அம்பேத்கரும் நடத்திய உரிமைப் போராட்டத்தை, அவர்களின் சிந்தனைகளைச் செயல்படுத்தும் வகையில், 31 ஆண்டுகளுக்கு முன்பே குடும்பச் சொத்தில் பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி கருணாநிதி நிறைவேற்றிய சட்டத்திற்கு உறுதியான அங்கீகாரத்தை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு, பெண்களின் உரிமையைக் காக்கும் இந்தக் குடும்பச் சொத்துரிமை தீர்ப்பை தடையின்றி நிறைவேற்றிட உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதேநேரத்தில், இந்திய நாடாளுமன்றம்-சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிட, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள் நிறைவேறாத நிலை இன்னும் நீடித்துக்கொண்டிருக்கிறது. அந்த குறிக்கோளை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியாவுக்கே முன்னோடியாகத் தமிழ்நாடு நிறைவேற்றிய பெண்களுக்கான சொத்துரிமைச் சட்டத்தை நாடு முழுவதும் சரியான வகையில் நடைமுறைப்படுத்திடவும், கருணாநிதி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நிறைவேற்றிடவும், மத்திய அரசுக்குத் தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க அரசு உரிய முறையில் அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஏனைய அரசியல் கட்சிகளும் பெண்களுக்கான இந்த இடஒதுக்கீட்டை கையிலெடுக்க வேண்டும். பெண்களின் உரிமைகளைக் காத்திட மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.க. எப்போதும் துணை நிற்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. வாரிசு உரிமை திருத்தச் சட்டம் செல்லும்: ‘குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என சுப்ரீம் கோர்ட்டு நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.