12 மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்: திருவண்ணாமலை, விழுப்புரத்திற்கு இன்று செல்கிறார்


12 மாவட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்: திருவண்ணாமலை, விழுப்புரத்திற்கு இன்று செல்கிறார்
x
தினத்தந்தி 9 Sept 2020 3:29 AM IST (Updated: 9 Sept 2020 3:29 AM IST)
t-max-icont-min-icon

2 மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அவர் இன்று செல்கிறார்.

சென்னை, 

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய 12 மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களுக்கு அவர் இன்று (புதன்கிழமை) செல்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகளுடன் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.

அந்த வகையில், இதுவரை 19 மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தி, உரிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். இந்த நிலையில், 20-வது மாவட்டமாக இன்று (புதன்கிழமை) காலை திருவண்ணாமலை மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக் குழுக்கள், தொழில் முனைவோர்களுடன் ஆலோசனை நடத்தும் அவர், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்துவைக்கிறார். புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனைத்தொடர்ந்து, மதியம் விழுப்புரம் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளும் அவர், அங்குள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் கொரோனா தடுப்பு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

வரும் 11-ந்தேதி காஞ்சீபுரம் மாவட்டத்திற்கும், 21-ந்தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கும், 22-ந்தேதி தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும், 23-ந்தேதி சிவகங்கை மற்றும் கரூர் மாவட்டத்திற்கும், 25-ந்தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கும், 26-ந்தேதி பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார்.

இவ்வாறு, இம்மாத இறுதிக்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். 21-ந்தேதிக்கு மேலான முதல்-அமைச்சரின் பயணம் திட்டம் தற்காலிகமாக வகுக்கப்பட்டுள்ளது என்றாலும், அதிகாரபூர்வமான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்று தெரிகிறது.


Next Story