ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை தொடரும்; பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை தொடரும்; பள்ளி, கல்லூரிகளை திறக்க தடை நீட்டிப்பு - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Sep 2020 12:15 AM GMT (Updated: 29 Sep 2020 7:10 PM GMT)

கொரோனா பரவலை தொடர்ந்து 9-வது முறையாக ஊரடங்கு உத்தரவு அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கான தடை தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 8-வது கட்ட ஊரடங்கு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகிறது. இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாவட்ட கலெக்டர்களுடனும், மருத்துவ நிபுணர்கள் குழுவுடனும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் இந்த கூட்டங்களில் விவாதிக்கப்பட்டது. பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், 9-வது கட்டமாக அக்டோபர் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வு கூட்டங்களின் அடிப்படையிலும், 29-9-2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில், மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், 30-9-2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும், 31-10-2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பாக கீழ்க்கண்ட பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது.

அவை வருமாறு:-

* அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

* திரைப்பட தொழிலுக் கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

* தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளிமாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது. இதுதவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

* அரசு மற்றும் அரசுத் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

* ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

மேலும், 29-8-2020 மற்றும் 8-9-2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1-10-2020 முதல், அரசு பொதுத்தேர்வு எழுதும் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24-9-2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும், மருத்துவ நிபுணர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்திவைக்கப்படுகின்றது. இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும்.

* மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 144-ன் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.

* தமிழ்நாடு முழுவதும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்தவிதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக் கும்.

* பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.

* திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற் கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும்.

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக் கான தடை நீடிக்கும்.

* புறநகர் மின்சார ரெயில் போக்குவரத்துக்கு தடை நீடிக்கும்.

* மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாசார நிகழ்வுகள், கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த உள்ள தடை தொடரும்.

அ.தி.மு.க. அரசு கடந்த செப்டம்பர் மாதம் அதிக அளவு தளர்வுகள் வழங்கிய நிலையிலும், நோய்த்தொற்று வேகம் மாநில அளவில் குறைந்து உள்ளது. நோய் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முக கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும்.

திருமண விழாக்களிலும், வழிபாட்டுத்தலங்களிலும், இறுதி ஊர்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளை கடைபிடித்து நோய்த்தொற்றினை தவிர்க்க வேண்டும். நோய்த்தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய்த்தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story