அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி- 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் அறிவிப்பு
அதிமுக முதல்வர் வேட்பாளராக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
அதிமுகவில் வரும் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளாராக யார் முன்னிறுத்தப்படுவார்? என்பது தொடர்பாக கடந்த சில தினங்களாக அக்கட்சி தீவிரமாக ஆலோசனை நடத்தி வந்தது. செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேட்டி அளித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி அக்டோபர் 7 (இன்று ) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறினார்.
இதனால், கடந்த சில தினங்களாகவே முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவு நிர்வாகிகள், மூத்த அமைச்சர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். குறிப்பாக நேற்று காலை முதல் அதிகாலை வரை மூத்த அமைச்சர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் மாறி மாறி சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினர். இதனால், ஆளும் அதிமுகவில் உச்ச கட்ட பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டதால், அக்கட்சியின் தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் குவிந்தனர். காலை 9 மணியளவில் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் அடுத்தடுத்து தலைமை அலுவலகம் வரிசையாக வரத்தொடங்கினர். பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வமும் கட்சி தலைமை அலுவலகம் வந்து சேர்ந்தார்.
இதன்பின்னர் இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அதிமுக சார்பில் வரும் 2021- ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்படுவார் என ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தனர். அதேபோல், வழிகாட்டுதல் குழுவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல் குழுவில் 11 பேர் இடம் பெற்றுள்ளனர். வழிகாட்டுதல் குழுவை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
வழிகாட்டுதல் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:
- திண்டுக்கல் சீனிவாசன்
- தங்கமணி
- எஸ்.பி வேலுமணி
- ஜெயக்குமார்
- சிவிசண்முகம்
- காமராஜ்
- ஜேசிடி பிரபாகர் - முன்னாள் எம்.எல்.ஏ
- மனோஜ் பாண்டியன்
- பா மோகன் - முன்னாள் அமைச்சர்
- ரா. கோபால கிருஷ்ணன் முன்னாள் எம்.பி
- கி மாணிக்கம் - சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ
Related Tags :
Next Story