ஆன்லைனில் கடன் தந்து கந்துவட்டி வசூலித்த விவகாரம்: ரா மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை


ஆன்லைனில் கடன் தந்து கந்துவட்டி வசூலித்த விவகாரம்: ரா மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 13 Jan 2021 1:02 PM GMT (Updated: 13 Jan 2021 1:02 PM GMT)

ஆன்லைனில் கடன் தந்து கந்துவட்டி வசூலித்த விவகாரம் தொடர்பாக, ரா மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

ஆன்லைன் கந்துவட்டி கடன் மோசடி வழக்கில் சீன நாட்டினர் உள்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட சிம்கார்டு வழங்கியதாக 4 பேரை நேற்று மத்திய பிரிவு போலீசார் கைது செய்து மொத்தமாக 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு சீட்டு மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசாரும், ‘சைபர் கிரைம்’ போலீசாரும் இணைந்து புலன் விசாரணை நடத்தி வந்தனர். 

இதனைத்தொடர்ந்து சீன போலி செயலி மூலம் கந்து வட்டி வசூலித்து மோசடி செய்தது தொடர்பான வழக்கில் இதுவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வந்த நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து ஆவணங்களை பெற்று அமலாக்கத் துறையினர் விசாரணையை தொடங்கினர்,. இதில் போலி செயலிகள் மூலம் இந்திய பணம் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதா எனவும் அமலாக்கத்துறை  விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

பின்னர் லோன் செயலி வழக்கில் கைதான சீனர்கள் குறித்த விவரம், குற்றப் பின்னணி கேட்டு டெல்லியில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்னை காவல்துறை கடிதம் அனுப்பியது. செயலி மோசடி வழக்கில் கைதான சீனர்கள் உட்பட 4 பேரிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. விசா காலம் முடிந்தும் இந்தியாவில் தங்கியிருந்ததால் அவர்களின் விவரங்களை காவல்துறை கோரி இருந்தது.  

இந்நிலையில் சீன செயலி மூலம், ஆன்லைனில் கடன் தந்து கந்துவட்டி வசூலித்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீனர்களிடம் ரா மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மக்களின் தகவல்களை திருடியது குறித்து, சீன மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், ரா மற்றும் மத்திய உளவுதுறை சீனர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story