காற்றில் பறக்கும் வாக்குறுதியை வழங்கும் கட்சி தி.மு.க. கொடுத்த வாக்கை நிறைவேற்றும் கட்சி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தாக்கு


காற்றில் பறக்கும் வாக்குறுதியை வழங்கும் கட்சி தி.மு.க. கொடுத்த வாக்கை நிறைவேற்றும் கட்சி அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி தாக்கு
x
தினத்தந்தி 16 Feb 2021 4:04 AM GMT (Updated: 16 Feb 2021 4:04 AM GMT)

காற்றில் பறக்கின்ற வாக்குறுதியை வழங்குகின்ற கட்சி தி.மு.க. என்றும், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற கட்சி அ.தி.மு.க. என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

கோவை, 

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி கோவை மாவட்டம், பேரூர் செட்டிபாளையத்தில் நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் திருமண வயதை அடைகின்ற போது, அவர்களது பொருளாதார சூழ்நிலையின் காரணமாக திருமணம் தடை பட்டு விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற திருமணத்தை நடத்தி வைக்கின்ற கட்சி அ.தி.மு.க. சாதி, மதத்திற்கு அப்பாற்றபட்ட கட்சியாக அ.தி.மு.க. விளங்கிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு எடுத்துகாட்டு இந்த திருமண நிகழ்வு என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

6 ஆயிரம் கிலோ தங்கம்

ஏழை, எளிய பெண்கள் திருமண வயதை அடையும் போது, பொருளாதாரச் சூழ்நிலையினால் அவர்களது திருமணம் தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவின் சிந்தையில் உதித்த சிறப்பான திட்டம் தான் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம். 25,000 மற்றும் 50,000 ரூபாய் திருமண நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ், தாலிக்காக வழங்கப்பட்ட 4 கிராம் தங்கம், 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளில் 11,87,715 மகளிர் பயனடைந்துள்ளனர்.

திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.4,214.76 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தாலிக்கு தங்கமாக ரூ.1,786 கோடியில் 6,086 கிலோ தங்கம் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களையும் சேர்த்து சுமார் ரூ.6,010 கோடி வழங்கிய அரசு அ.தி.மு.க. அரசு. இவ்வளவு குடும்பத்திற்கும் விளக்கேற்றிய பெருமை ஜெயலலிதாவையே சாரும்.

சீர்வரிசை

இங்கு மேடையிலே மணமக்களுக்கு வழங்க சீர்வரிசை அடுக்கி வைக்கப்பட்டுல்ளது. தமிழகத்திலே இதுபோன்ற சீர்வரிசை வழங்கும் கட்சி உண்டா? இல்லை. இங்கே மணமக்களுக்கு கொடுப்பதற்காக 73 பொருட்கள் அடங்கிய சீர் வரிசை அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. மணமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, ஏழை, எளிய மக்களுக்கு கொடுக்கின்ற கட்சி அ.தி.மு.க. என்பது இந்த சீர்வரிசைகளைப் பார்க்கும் போதே நிரூபணமாகின்றது.

தி.மு.க. 2006 தேர்தல் அறிக்கையிலே நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். கருணாநிதி உயிரோடிருந்த கால கட்டத்திலே நிலத்தை காட்டமாலேயே உயிரிழந்து விட்டார். காற்றிலே பறக்கின்ற வாக்குறுதியை வழங்குகின்ற கட்சி தி.மு.க., கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்ற கட்சி அ.தி.மு.க.

சட்டம்-ஒழுங்கு

சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மையான அரசு எங்களுடைய அரசு. இந்தியாவிலேயே அமைதிப்பூங்காவாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. இங்கு எந்த சமுதாயத்திற்கும் எந்த இடையூறும் கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story