அவதூறு வீடியோ பதிவுகளை வெளியிட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு


அவதூறு வீடியோ பதிவுகளை வெளியிட்ட முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 17 Feb 2021 4:20 AM GMT (Updated: 17 Feb 2021 4:20 AM GMT)

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் குறித்து அவதூறு வீடியோ பதிவுகளை வெளியிட்ட வழக்கில் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

சென்னை,

சென்னை, கொல்கத்தா ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சி.எஸ்.கர்ணன். இவர், சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், பெண் வக்கீல்கள் ஆகியோர் குறித்து அவதூறாக பேசி அந்த வீடியோ பதிவுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கர்ணனை கடந்த டிசம்பர் மாதம் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு கீழ்கோர்ட்டு ஜாமீன் வழங்க மறுத்ததால், சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தார். அரசு தரப்பில் குற்றவியல் வக்கீல் பிரபாவதி, மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். கர்ணனுக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என்று புகார்தாரர்கள் மனு தாக்கல் செய்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வி.பாரதிதாசன் பிறப்பித்த உத்தரவு:-

மன அழுத்தம்

மனுதாரர் அரசியல் அமைப்பு சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட பதவியை வகித்தவர். தான் வெளியிடும் இதுபோன்ற வீடியோ பதிவுகளால் சட்டப்படியான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிந்தே இந்தச் செயலை செய்துள்ளார். இதற்காக அவர் மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர பெசன்ட்நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி மிரட்டிய வழக்கும் அவர் மீது உள்ளது.

இந்த ஜாமீன் மனு மீதான விசாரணையில், கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கர்ணனுக்கு சிறை தண்டனை வழங்கியது. மேலும், அவரது சகோதரர் சமீபத்தில் மரணம் அடைந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் அவர் இவ்வாறு நடந்துகொண்டார். அவர் வேண்டுமென்று எந்த ஒரு பதிவையும் வெளியிட வில்லை. அவரது செயலால் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் மன்னிப்புக் கேட்கத் தயாராக இருப்பதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசியல் தலைவர்

மேலும் அவரது மனைவியும் மகனும் இதே காரணத்தைக் கூறி, ஜாமீன் வழங்கினால் இனிமேல் இதுபோன்ற அவதூறு வீடியோ பதிவை அவர் வெளியிடமாட்டார் என்றும் கூறியுள்ளனர். ஆனால், மனுதாரர் பேசிய வீடியோ பதிவுகளை பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி, ஓய்வுபெற்ற நீதிபதிகள், பணியில் உள்ள நீதிபதிகள் குறித்து மிகவும் மோசமான வார்த்தைகளால் ஆபாசமாக, அவதூறாக பேசியுள்ளார்.

மனுதாரருக்கு எதிராக மொத்தம் 10 வழக்குகள் உள்ளன. அதில் ஒரு சில வழக்குகளில்தான் போலீசார் புலன் விசாரணையை முடித்துள்ளனர். மேலும், மனுதாரர் ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர். தற்போது, அரசியல் கட்சியின் தலைவராகவும் உள்ளார். மிகவும் செல்வாக்கு உள்ள நபரான இவருக்கு தற்போது ஜாமீன் வழங்கினால், புலன்விசாரணைக்கு பாதிப்பு ஏற்படவும், சாட்சிகளை கலைக்கவும் வாய்ப்பு உள்ளது. அதனால், ஜாமீன் வழங்க மறுத்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.


Next Story