மக்களோடு மக்களாக இருப்பவன்; ‘தேர்தலுக்காக வருபவன் நான் அல்ல'; மு.க.ஸ்டாலின் பேச்சு


மக்களோடு மக்களாக இருப்பவன்; ‘தேர்தலுக்காக வருபவன் நான் அல்ல; மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 19 Feb 2021 7:15 PM GMT (Updated: 19 Feb 2021 7:15 PM GMT)

மக்களோடு, மக்களாக இருப்பவன் தான் என்றும், தேர்தலுக்காக வருபவன் அல்ல என்றும் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டம், சிங்காநல்லூர் ஜென்னி கிளப் எதிரில், கொடிசியா அரங்கம் அருகில் நடைபெற்ற, கோவை மாநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளுக்கான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் பேசியதாவது:-

தீர்த்து வைப்போம்
தேர்தலுக்காக வருபவன் அல்ல நான். அரசியலுக்காக வருபவன் அல்ல நான். எப்போதும், என்றும், எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் நான். மக்களோடு மக்களாக இருப்பவன் நான். தமிழக மக்களுக்கு நான் ஒரு வாக்குறுதியை அளித்துள்ளேன். அ.தி.மு.க. அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளை 100 நாட்களில் தீர்த்து வைப்பேன் என்பதுதான் நான் அளித்துள்ள வாக்குறுதி.

என்னை நம்பி நீங்கள் உங்கள் மனுக்களைக் கொடுத்துள்ளீர்கள். இன்னும் மூன்றே மாதத்தில் நடக்க இருக்கும் ஆட்சி மாற்றம் உங்கள் குறைகளைக் களையும். அ.தி.மு.க. அரசாங்கம் செய்யத் தவறிய கடமையை- தி.மு.க. அரசாங்கம் நிச்சயம் செய்து கொடுக்கும்.

பினாயில் வாங்குவதில் ஊழல்
சுண்ணாம்பு பவுடர் வாங்குவதில், பினாயில் வாங்குவதில் ஊழல் செய்யும் ஒருவரைப் பார்த்திருக்கிறீர்களா? அதுதான் வேலுமணி. உள்ளாட்சி அமைப்புகளில் நடந்துள்ள ஊழல்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் டானியல் ஜேசுதாஸ் என்பவர் பல தகவல்களை வாங்கி இருக்கிறார். 25 கிலோ கொண்ட சுண்ணாம்பு பவுடர் தனியார் கடைகளில் 170 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் 842 ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். பினாயில் ஒரு பாட்டில் 20 ரூபாய்க்கு கடையில் கிடைக்கிறது. அதை 130 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறார்கள்.

டான்சி வழக்கும் இப்படித்தான் ஆரம்பித்தது. ஜெயா பப்ளிகேஷன்ஸ் தொடங்கப்பட்டபோது, ஜெயலலிதா, சசிகலா இருவரும் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்து 1991-92ல் ஆரம்பித்தனர். அதே ஜெயா பப்ளிகேஷன்ஸ் மூலமாக டான்சி நிறுவனத்தை வாங்கினர். ‘எப்படி அவ்வளவு பணம் ஜெயா பப்ளிகேஷனுக்கு வந்தது’ என்பதுதான் எங்களின் பிரதானக் கேள்வியாக இருந்தது. எனது வழக்கின் விளைவாக டான்சி நிலத்தை ஜெயலலிதா திருப்பிக் கொடுத்தார். அதே போல, எஸ்.பி.வேலுமணிக்கும் சில நிறுவனங்களுக்குமான தொடர்புகளுக்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன. அது போன்ற வழக்குதான் தி.மு.க. அரசு அமைந்ததும் அமைச்சர் வேலுமணி மீது நிச்சயமாகப் பாயும். வேலுமணியின் ஊழலாட்சிக்கு முடிவுகட்ட- அராஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் தி.மு.க. வென்றாக வேண்டும்.

நாடு காப்பாற்றப்பட வேண்டும்
கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் கோட்டை என்று சொல்லி நாட்டை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அதில் ஓட்டை விழுந்துவிட்டது. இந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமாக ஆழக் குழிதோண்டிப் புதைப்போம்! மக்கள் பேராதரவுடன் அதை நடத்தி முடிப்போம். இது உறுதி! தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் அந்த வெற்றியைக் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்.

கருணாநிதியின் கடைசி ஆசை ஆட்சிக்கு வரவேண்டும் என்பது கூட அல்ல, இந்த நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று சொன்னால் அவர் இன்றைக்கு நம்மிடையே இல்லை என்று சொன்னாலும் அவருடைய எண்ணங்கள், உணர்வுகள், எழுத்துகள், பேச்சுகள், உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு அனைத்தும் நமது உள்ளத்தில் இருக்கிறது. அதற்குப் பதில் சொல்கிற நாள் தான் வரும் தேர்தல்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story