10 லட்சம் வழக்குகள் வாபஸ் அறிவிப்பு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போன்றது; எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி தாக்கு


10 லட்சம் வழக்குகள் வாபஸ் அறிவிப்பு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவதை போன்றது; எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
x
தினத்தந்தி 21 Feb 2021 11:22 PM GMT (Updated: 21 Feb 2021 11:22 PM GMT)

10 லட்சம் வழக்குகள் வாபஸ் அறிவிப்பு குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போன்ற செயல் என்று எடப்பாடி பழனிசாமி மீது கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

பேட்டி
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற மார்ச் 1-ந் தேதி குமரி மாவட்டம் வருகிறார். இதுதொடர்பாக நாகர்கோவிலில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

10 லட்சம் வழக்குகள் வாபஸ்
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அரசாங்கம் முழுமையான தோல்வியடைந்துள்ளது. 10 லட்சம் வழக்குகளை வாபஸ் பெறுகிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அவரே வழக்குப் போட்டார்,  அவரே வாபஸ் பெற்று உள்ளார். இதில் என்ன பெருமை இருக்கிறது. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த ஏராளமான போராட்டங்களுக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார். எனவே இந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டு அதனால் சிறுபான்மை இன மக்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் சொல்கிறார். வழக்கை வாபஸ் பெற்றதற்காக சிறுபான்மையின மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அந்த தீர்மானத்தையே வாபஸ் பெறுவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்வார் என்றால் அவரை சிறுபான்மையினர் விரும்புவார்கள். எனவே இது குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போன்ற செயலாகும். வழக்கை வாபஸ் பெற்றுவிட்டேன் எனவே எனக்கு வாக்களியுங்கள் என்று கேட்பது வேடிக்கையாக, வியப்பாக இருக்கிறது.

புதியவர்களுக்கு வாய்ப்பு
தி.மு.க. கூட்டணி ஏறக்குறைய இறுதி செய்யப்பட்டு விட்டது. இனிமேல் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது குறித்து வரும் 24-ந் தேதி நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட உள்ளது.

கமல்- ரஜினி சந்திப்பு நண்பர்களுடனான சந்திப்பு. காங்கிரஸ் கட்சி சார்பில் புதியவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். சிறப்பாக செயல்பட்டு வருவோருக்கும் வாய்ப்பு வழங்கப்படும். அரசியல் என்பதே மாற்றங்களை உள்ளடக்கியதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story