10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்


10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 25 Feb 2021 1:29 AM GMT (Updated: 25 Feb 2021 1:29 AM GMT)

அனைத்து துறைகளிலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது.

பணி நிரந்தரம்

தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்.டி.ஓ.,) ஒப்பந்த அடிப்படையில் கம்ப்யூட்டர் புரோகிராமர்கள் 10 முதல் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு, போக்குவரத்து ஆணையர் 2014 மற்றம் 2017-ம் ஆண்டுகளில் கோரிக்கை மனு அனுப்பினார். அரசு இந்த கோரிக்கையை பரிசீலிக்காததால், தங்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஒப்பந்த ஊழியர்கள் சிவக்குமார் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கிற்கு உள்துறை செயலாளர் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், “மனுதாரர்களுக்கும், அரசுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அவர்கள் ஒப்பந்த நிறுவனத்தின் ஊழியர்கள். அந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று போக்குரவத்து ஆணையர் அனுப்பிய கடிதத்தை அரசு ஏற்கனவே நிராகரித்து விட்டது” என்று கூறியுள்ளார்.

முறைகேடு

மேலும், “இந்த ஒப்பந்த ஊழியர்கள் தனியார் இன்டர்நெட் மையங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பணி தொடர்பான பல முறைகேடுகளை செய்து, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த ‘வாகன் சாரதி’ திட்டம் போக்குவரத்து துறை பணிக்கு மிகவும் எளிதாகவும், பயனுள்ளதாகவும் உள்ளதால், இந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அதனால், இவர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.

முறைகேடு செய்ததாக ஒப்பந்த ஊழியர்கள் மீது அரசு சுமத்தும் குற்றச்சாட்டுகளை மனுதாரர்கள் தரப்பில் மறுப்பு தெரிவித்து கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

லஞ்சமும், ஊழலும் ஒரு அங்கம்

தமிழில் இலவு காத்த கிளி என்ற கதை ஒன்று சொல்வார்கள். அதுபோல, 15 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றும் மனுதாரர்கள், தங்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கிளியை போல் காத்திருந்தும் பயன் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த ஐகோர்ட்டு உள்பட பல துறைகளில் தற்காலிக பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மனுதாரர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை. மத்திய அரசின் வாகன் சாரதி திட்டம் வந்து விட்டதால், இவர்களது சேவை தேவையில்லை என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது.

தற்காலிக ஊழியர்கள் முறைகேடுகள் செய்தனர் என்பதற்கு அரசு தரப்பில் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. நிரந்தர அரசு ஊழியர்களே லஞ்சம் வாங்கி போலீசாரால் கைது செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 1967-ம் ஆண்டுக்கு பின்னர், லஞ்சமும், ஊழலும் ஒரு அங்கமாக மாறி விட்டது.

அனுமதிக்க முடியாது

எனவே, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தற்காலிகமாக பணியாற்றும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து 2 மாதங்களுக்குள் அரசு முடிவு எடுக்க வேண்டும். இவர்கள் மட்டுமல்லாமல், பொதுப்பணித்துறை, நீதித்துறை உள்ளிட்ட பல துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய அரசு முடிவு எடுக்க வேண்டும். வேலையில்லாமல் பொருளாதார நெருக்கடியில் யாரும் சாகவில்லை என்பதை அரசு உறுதி செய்யவேண்டும்.

பணி பறிப்பு என்ற கத்தி தற்காலிக பணியாளர்கள் தலைக்கு மேல் தொங்குவதை அனுமதிக்க முடியாது.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

 


Next Story