தகவல் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி ‘எதிரிகளின் பொய்களை தவிடுபொடியாக்குவோம்’: மு.க.ஸ்டாலின்


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல் வீரர் செயலியை அறிமுகப்படுத்தியபோது எடுத்தபடம்.
x
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செயல் வீரர் செயலியை அறிமுகப்படுத்தியபோது எடுத்தபடம்.
தினத்தந்தி 25 Feb 2021 10:57 PM GMT (Updated: 25 Feb 2021 10:57 PM GMT)

தகவல் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி எதிரிகளின் பொய்களை தவிடுபொடியாக்குவோம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை - தி.மு.க. அலுவலகம் கலைஞர் அரங்கில் நடந்த செயல்வீரர் செயலி அறிமுக விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று, அச்செயலியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நிழல் யுத்தம்

தேர்தல் எனும் ஜனநாயக போர்க்களத்தில் உறுதியுடன் நிற்கும் தொண்டர்களுக்கு கூர் தீட்டப்பட்ட அறிவியல் ஆயுதம் ஒன்றை வழங்குகின்ற நிகழ்வு இது. நாளுக்குநாள் மக்களிடம் செல்வாக்கு பெற்று வரும் தி.மு.க.விடம் தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதி வெற்றி பெற முடியாது என்பதால் ஆட்சியாளர்களும், அவர்களின் கைக்கூலிகளும் நிழல் யுத்தத்தை நடத்துகிறார்கள். போர்க்களம் எதுவாக இருந்தாலும் வெற்றி தி.மு.க.வுக்குத்தான் என்பதை மரணத்திலும் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி கண்ட கருணாநிதியின் தொண்டர்களாகிய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிரூபித்திட வேண்டும்.

அதற்குத்தான் இந்த செயல்வீரர் செயலி அறிமுக விழா. செயல்வீரர் என்றால் யார்? தி.மு.க.வின் ஒவ்வொரு தொண்டரும் செயல்வீரர்தான். ஊழியர்கள்-உறுப்பினர்கள் என்று சொல்லி வந்ததை மாற்றி, செயல்வீரர்கள் என மதிப்புடன் அழைத்த இயக்கம் இது. அதனால் இந்த செயலியை எல்லாரும் தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

அவதூறு பரப்புகிறார்கள்

எதற்காக இந்த செயலி? மானமுள்ள ஆயிரம் பேருடன் சண்டை போட முடியும். மானமற்ற ஒருவனுடன் மல்லுக்கட்ட முடியாது என்றார் தந்தை பெரியார். அதுபோலவே, உண்மை பேசுவோரை எதிர்கொள்ள முடியும். பொய்களை மூட்டை கட்டிக் கொண்டு அவிழ்த்து விடுபவர்களை எதிர்கொள்வது சுலபமல்ல. ஆனால், இந்த தேர்தல் களத்தில் தி.மு.க.வுக்கு எதிராக பொய்களை அவிழ்த்துவிட்டு, அவதூறுகளை பரப்பிவிட்டு வெற்றி பெற்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.

அவர்களின் பகல்கனவை கலைத்து, தூங்கவிடாமல் செய்ய வேண்டும் என்பதற்காக தான் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. தி.மு.க. உருவான காலத்தில் இருந்து இந்த முக்கால் நூற்றாண்டுகளாக எத்தனையோ பொய் பிரசாரங்கள், எத்தனையோ பழிகள், எவ்வளவோ அவதூறுகள். அத்தனையையும் தவிடுபொடியாக்கித்தான் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், திரும்ப திரும்ப அந்த பொய்களையும் அவதூறுகளையும் எதிரிகள் பரப்பிக்கொண்டு இருப்பார்கள். பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.

முறியடிக்க வேண்டும்

பயிர் விளைய வேண்டுமென்றால், களைகளை அகற்றியே ஆக வேண்டும். அதனால் நம்முடைய இன்றைய முதன்மையானப் பணி என்பது பொய் பிரசாரத்தை முறியடிப்பது. அவதூறுகளை விரட்டி அடிப்பது. அதற்குத்தான் இந்த செயலி. இதில் உங்களுக்கு உண்மை செய்திகள் வந்து கொண்டே இருக்கும். எதிரிகளுக்கான பதிலடிகள் வந்து கொண்டே இருக்கும். ஆதாரமான போட்டோக்கள் வரும். வீடியோக்கள் வரும். அதனை நீங்கள் மூன்று முறை ‘கிளிக்’ செய்தால் ‘பேஸ்புக், டுவிட்டர்’ என எல்லாவற்றிலும் பதிவாகிவிடும். அதுபோல ‘வாட்ஸ்அப் குரூப்’களிலும் இதனை பகிரலாம்.

குறிப்பாக பெண்களிடம் இந்த பரப்புரை நடைபெற வேண்டும். வாக்காளர்களில் பாதிக்கும் அதிகமாக பெண்கள் இருக்கிறார்கள். அவர்களால் நம்மைப் போல பொதுக்கூட்டம், மாநாடுகளுக்கு வர முடியாது. செய்தி சேனல்களை பார்ப்பதற்கும் அந்தளவு நேரம் இருக்காது. ஆனால், அவர்கள் கையில் உள்ள செல்போனில் நமக்கு எதிரான செய்திகள் எளிதாக பரப்பப்படும். அதனை முறியடிப்பதற்கு, இந்த செயலி பயன்படும்.

பதிய வைப்போம்

இந்த கடமையை நாம் சரியாக செய்யாமல் சற்று அலட்சியமாக இருந்ததால்தான், இன்று தமிழ்நாடு திவாலாகும் நிலையில் உள்ளது. தொண்டர்கள் நினைத்தால் ஒரு மணிநேரத்தில் கோடிக்கணக்கான பேருக்கு நமது செய்திகளை கொண்டு சேர்த்துவிட முடியும்.

ஒரு பொதுக்குழுவையே காணொலி மூலம் நடத்தி, இந்திய அரசியல்களத்தை திரும்பி பார்க்க வைத்த பெருமைக்குரியது தி.மு.க. அதனால், தகவல் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி எதிரிகளின் பொய்களை தவிடுபொடியாக்குவோம்.

தலைவர் தலைமையிலான தி.மு.க. அரசின் சாதனைகளை ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிய வைப்போம். மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம். மக்களின் கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story