தி.மு.க. வேட்பாளர் விருப்ப மனு நிறைவு: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விண்ணப்பம்


தி.மு.க. வேட்பாளர் விருப்ப மனு நிறைவு: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விண்ணப்பம்
x
தினத்தந்தி 1 March 2021 2:14 AM GMT (Updated: 1 March 2021 2:14 AM GMT)

சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. வேட்பாளர் விருப்ப மனு நிறைவடைந்தது. சென்னை கொளத்தூரில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார்.

சென்னை, 

சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் விருப்ப மனு வாங்கி தாக்கல் செய்தனர். விண்ணப்ப கட்டணம் வாங்க ரூ.1,000-மும், மனு தாக்கல் செய்ய ரூ.25 ஆயிரமும் கட்டணமாக விதிக்கப்பட்டிருந்தது.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி தொகுதிக்கும், முதன்மை செயலாளர் கே.என்.நேரு திருச்சி மேற்கு தொகுதிக்கும், இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கும் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர். இதேபோல கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சியினரும், எம்.எல்.ஏ.க்களும் ஆர்வத்துடன் மனு தாக்கல் செய்தனர்.

மு.க.ஸ்டாலின் மனு தாக்கல்

இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி, விண்ணப்ப வினியோகம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான நேற்று விருப்ப மனு தாக்கல் செய்ய கட்சியினர் ஆர்வம் காட்டினர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 11.20 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அவருடன் கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், ஆ.ராசா உள்பட நிர்வாகிகளும் வந்தனர். அங்கு கொளத்தூர் தொகுதியில் போட்டியிட மு.க.ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார். அப்போது திரண்டிருந்த தி.மு.க.வினர் வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். பொன்னாடைகள் அணிவித்தும், பூங்கொத்து வழங்கியும் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். .

கொளத்தூரில் 3-வது முறை

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 1984, 1989, 1991, 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். இதில் அவர் 4 முறை வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகியிருக்கிறார்.

அதன்பின்னர் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டு தேர்தலிலும் கொளத்தூரிலேயே போட்டியிட்டு 2-வது முறையாக வெற்றி கண்டார். தற்போது கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.

சேகர்பாபு, தங்க தமிழ்செல்வன்

தி.மு.க. மாவட்ட செயலாளர் பி.கே.சேகர்பாபு எம்.எல்.ஏ. துறைமுகம் தொகுதியிலும், கொள்கைபரப்பு துணை செயலாளர் தங்க தமிழ்செல்வன் போடி மற்றும் ஆண்டிப்பட்டி தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

Next Story