டயரில் பெட்ரோல் ஊற்றி பெரியார் சிலைக்கு தீ வைப்பு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியல்


டயரில் பெட்ரோல் ஊற்றி பெரியார் சிலைக்கு தீ வைப்பு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 March 2021 11:53 PM GMT (Updated: 7 March 2021 11:53 PM GMT)

கிருஷ்ணகிரியில் டயரில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்து சென்றனர். இதை கண்டித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி சமத்துவபுரத்தின் நுழைவுவாயிலில் பெரியார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் மோட்டார்சைக்கிளில் மர்ம நபர்கள் 2 பேர் அங்கு வந்தனர்.

அவர்கள் பெரியார் சிலை மீது டயரை போட்டு அதில் பெட்ரோல் ஊற்றி சிலைக்கு தீ வைத்து அவமதிப்பு செய்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்து கூச்சலிட்டனர். அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

சாலை மறியல்

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் சிலை மீது இருந்த டயர்களை அப்புறப்படுத்தி, சிலைக்கு புதிய வர்ணம் பூச நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த நிலையில் காலை 11 மணி அளவில் திராவிடர் கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் அங்கு வந்து பெரியார் சிலையை அவமதித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து புதிதாக வர்ணம் பூசப்பட்ட சிலைக்கு, போலீசார் மாலை அணிவித்தனர்.

காந்தி மண்டபத்திற்குகாவிவர்ணம்

இதேபோல் நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள காந்தி மண்டபத்தில் காந்தி, இந்திரா காந்தி, பாரதியார் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் காந்தி மண்டபத்தில் வெளிப்புற சுவரில் வர்ணம் பூசி, அங்கு இருந்த கட்சிகளின் கொடி வர்ணத்தையும் அழித்தனர்.

இதற்கிடையே காந்தி மண்டபத்துக்கு காவி வர்ணம் பூசப்பட்டு உள்ளதாக கூறி திடீரென்று நேற்று சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாநகராட்சி சார்பில், அனைத்து விளம்பரங்களையும் அழிக்க அரக்கு நிறத்திலான வர்ணம் பூசி வருகின்றனர். அதேபோல் தான் காந்தி மண்டப சுவரிலும் பூசி உள்ளனர். எனினும் அங்கு வெள்ளை நிறத்திலான வர்ணம் பூசி பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story