கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சி: தமிழகத்தில் அமலானது புதிய கட்டுப்பாடுகள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 20 April 2021 2:43 AM GMT (Updated: 20 April 2021 2:54 AM GMT)

தமிழகத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த ஊரடங்கானது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் 10 ஆயிரத்தைக் கடந்து, பொதுமக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. முககவசம் அணிவதை தீவிரப்படுத்த அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் தடுப்பூசி போடும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. என்றாலும், கொரோனா பரவல் தீவிரத்தைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

அதன் அடிப்படையில், ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட இருக்கிறது. இந்த ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும்.

இந்த நேரத்தில், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்து, வாடகை கார், ஆட்டோ மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கான பஸ் போக்குவரத்துக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கும் வாடகை கார், ஆட்டோ, தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெட்ரோல் பங்க்குகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கும் தொழிற்சாலைகள் இயங்கவும், அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அடையாள அட்டை அல்லது குறிப்பிட்ட நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் இன்று இரவு 10 மணி முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், போலீஸ் உயர் அதிகாரி, வருவாய்த்துறை அதிகாரி, சுகாதாரத்துறை அதிகாரி ஆகியோர் இடம்பெற்றிருப்பார்கள்.

தேநீர் கடைகள், உணவு விடுதிகள், வணிக வளாகங்கள், காய்கறி, பலசரக்கு உள்ளிட்டு அனைத்து கடைகளுக்கும் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

ஊடகம் பத்திரிகை துறையினர் தொடரந்து இரவிலும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். புதிதாக கும்பாபிஷேகம், திருவிழாக்கள் நடத்துவதை தற்காலிகமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனினும் ஏற்கனவே ஏற்பாடு செய்ப்பட்டிருந்த நிகழ்வுகளுக்கு 50 பேர் மட்டும் கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மிகாமல் கலந்து கொள்ளவும், தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரை மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கிவந்த டாஸ்மாக் மதுபான கடைகளும், பார்களும் இரவு 9 மணி வரை இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விதித்துள்ள இரவு நேர ஊரடங்கினைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பஸ்கள் அதிகாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக பகல் பொழுதில் சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பஸ்கள் இயக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story