நோயாளிகளுக்கு தங்கு, தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் அதிகாரிகளுக்கு, மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


நோயாளிகளுக்கு தங்கு, தடையின்றி ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் அதிகாரிகளுக்கு, மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 6 May 2021 9:06 PM GMT (Updated: 6 May 2021 9:06 PM GMT)

நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தங்கு, தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு, மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஆஸ்பத்திரிகளில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பி வருகின்றன. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 898 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.

நோயாளிகளுக்கு ஆக்சிஜன்

இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழகத்தின் ஆக்சிஜன் வினியோகத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தேசிய ஆக்சிஜன் பகிர்ந்தளிப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை முழுமையாக பயன்படுத்தியும், பிற மாநிலங்களிடம் இருந்து பெற்றும் தங்குத் தடையின்றி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளிடம், மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Next Story