கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை வேகம் எடுத்துவிட்டது: ‘‘அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள்’’ மன்றாடி கேட்டுக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் பேச்சு


கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை வேகம் எடுத்துவிட்டது: ‘‘அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடந்துகொள்ளுங்கள்’’ மன்றாடி கேட்டுக்கொள்வதாக மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 9 May 2021 5:20 AM GMT (Updated: 9 May 2021 5:20 AM GMT)

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கை வேகம் எடுத்துவிட்டதாகவும், அரசின் உத்தரவுக்கு பொதுமக்கள் கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் நாளை முதல் 2 வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியிருப்பதாவது:-

பொதுமக்களுக்கு நன்றி

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத ்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இடங்களை பெற்று, தி.மு.க.வின் ஆட்சியை அமைத்திருக்கிறோம்.

தி.மு.க.வின் மீதும், என் மீதும் நம்பிக்கை வைத்திருக்கின்ற மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இது ஒரு கட்சியின் அரசாக இல்லாமல், அனைத்து மக்களின் அரசாக இருக்கும். அவ்வாறு தான் செயல்படும். தமிழக முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடனே கோட்டைக்கு வந்து நான் 5 முக்கியமான அரசாணைகளை பிறப்பித்தேன். தேர்தல் நேரத்தில் என்னால் வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்டவை தான் அவை.

தமிழக அரசு முயற்சி

இது கொரோனா என்ற பெருந்தொற்று காலமாக இருக்கின்றதால், அதனைக் கட்டுப்படுத்தினோம் - முழுமையாக ஒழித்தோம் - கொரோனா தொற்றே இனி இல்லை என்கின்ற சூழலை தமிழகத்தில் உருவாக்கவே தமிழக அரசு முழு முயற்சியில் இறங்கி இருக்கிறது.

கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவாமல் தடுப்பது, கொரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளானவர்களை முழுமையாக மீட்பது ஆகிய 2 குறிக்கோள்களை தமிழக அரசு முன்னெடுத்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.

மிக மோசமான நிலையில் நோய் தொற்று

முதல் அலையைவிட மோசமாக இந்த கிருமி உருமாறி இருக்கிறது. இப்போது இளைஞர்கள், குழந்தைகள் ஆகியோரை அதிக அளவில் பாதித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, இளைஞர்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. 2 அல்லது 3 நாட்களுக்குள் நுரையீரலை அதிகமாக பாதிக்கிறது.

வேறு ஏதாவது நோய் பாதிப்பு இருக்கிறவர்களுடைய மரணம் அதிகமாக இருந்த நிலைமை மாறி, வேறு நோய் பாதிப்புகளே இல்லாதவர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். இப்போது நோய்த் தொற்று ஏற்படுவது மிக மோசமான நிலையில் இருக்கிறது. உடல் வலிமையை இந்த நோய்த்தொற்று இழக்க வைக்கிறது.

மாபெரும் சவால்

வடமாநிலங்களில் இருந்தும், நமது பக்கத்து மாநிலங்களில் இருந்தும் வரும் தகவல்கள் அச்சம் தரக்கூடியதாக இருக்கிறது. அந்தளவிற்கு தமிழகம் மோசம் அடையவில்லையென்றாலும், பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெருந்தொற்று தீவிரமாக பரவி கொண்டிருக்கிறது. தினந்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிய தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள்.

2 வாரங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவ்வாறு அதிகமானால், நோயைக் கட்டுப்படுத்துவது மருத்துவத் துறைக்கு மாபெரும் சவாலாக ஆகிவிடும்.

முழு ஊரடங்கு

இது தொடர்பாக அரசு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினேன். கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்னொரு ஊரடங்கு அவசியம் என்று அதிகாரிகள் சொல்கிறார்கள்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளை போடாமல் கொரோனாவை கட்டுப்படுத்த இயலாது என்ற சூழலில் 10-ந்தேதி (நாளை) முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு காலமாக அறிவிக்கப்படுகிறது.

வீட்டிலேயே இருங்கள்

இந்த 14 நாளும் ஊரடங்கு கட்டுப்பாட்டை பயன்படுத்தி, நாட்டு மக்கள் அனைவரும் கட்டுப்பாடாக இருந்தால், தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். அனைவரும் வீட்டிலேயே இருங்கள்.

பயம் மட்டும் வேண்டாம். இது குணப்படுத்தக்கூடிய நோய் தான். இது கஷ்டமான காலம் தான். அதேநேரத்தில் கடக்க முடியாத காலம் அல்ல.

அதிகாரிகள் கூட்டத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன். கொரோனா பரவல் குறித்த முழு உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். உண்மையை நேருக்கு நேராக சந்திக்க வேண்டும் என்று நான் சொன்னேன். அந்த வகையில் கொரோனா என்கிற பெருந்தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் எடுத்துவிட்டது.

மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்

அரசின் உடைய உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு நீங்கள் எல்லோரும் நடந்து கொள்ள வேண்டும் என்று மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நம்மையும் நாட்டு மக்களையும் காப்போம். கொரோனா தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம்.

இவ்வாறு அந்த வீடியோவில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.


Next Story