தமிழகத்தில் அமலானது இரண்டு வார முழு ஊரடங்கு: கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் விவரம்


தமிழகத்தில் அமலானது இரண்டு வார முழு ஊரடங்கு: கடைபிடிக்கப்படும் நடைமுறைகளின் விவரம்
x
தினத்தந்தி 9 May 2021 10:31 PM GMT (Updated: 9 May 2021 10:31 PM GMT)

தமிழகத்தில் இரண்டு வார முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முழு ஊரடங்கின்போது காய்கறி-மளிகை கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந் தேதி வரையிலான 14 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. அதன்படி இன்று காலை 4 மணி முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. 

முழு ஊரடங்கின்போது கடைபிடிக்கப்படும் நடைமுறைகள் விவரம் வருமாறு:-

* பெரிய கடைகள், வணிக வளாகங்கள், அதில் இயங்கும் கடைகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, தனியாக செயல்படும் மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி-மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை இயங்கலாம். ஒரே சமயத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

* அதேபோல உணவுகளை டெலிவரி செய்யும் ஆன்-லைன் வணிக நிறுவன ஊழியர்களும் பகல் 12 மணி வரை மட்டுமே பணியாற்றலாம். மளிகை, பலசரக்கு, காய்கறி, இறைச்சி, மீன் கடைகள் தவிர இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

* முழு ஊரடங்கு காலத்தில் ‘டாஸ்மாக்’ கடைகள் திறக்கப்படாது.

* ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி உண்டு. டீக்கடைகளும் பகல் 12 மணி வரை மட்டும் செயல்படலாம். ஓட்டல்கள்-டீக்கடைகளில் உட்கார்ந்து சாப்பிட அனுமதியில்லை. ஓட்டல்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

* தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது.

* அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

* மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசு-தனியார் பஸ் போக்குவரத்து மற்றும் வாடகை டாக்சி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது. எனவே பஸ் ஓடாது.

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை செயல்படும்.

* நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள், நடைபெற்றுவரும் கட்டிடப்பணிகள் அனுமதிக்கப்படும். ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம். திருமணத்தில் 50 பேர் பங்கேற்கலாம்.

* பெட்ரோல் - டீசல் பங்க்குகள் இயங்கும்

மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றாதோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகை வினியோகத்துக்கு தடை இல்லை - அரசு உத்தரவில் திட்டவட்ட அறிவிப்பு

முழு ஊரடங்கில் மருத்துவம், பால் வினியோகம் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பத்திரிகை வினியோகம் தங்கு தடையின்றி நடைபெறலாம் என்று தமிழக அரசின் உத்தரவில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதேபோல பத்திரிகை மற்றும் ஊடக துறையினர் வழக்கம்போல பணிக்கு சென்றுவர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

போலீசாரின் வாகன சோதனையின்போது அடையாள அட்டையை காண்பித்து பத்திரிகையாளர்கள் தங்கு தடையின்றி செல்லலாம் என்று தமிழக அரசு உத்தரவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


Next Story