ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 35 டன் ஆக்சிஜன் நாளைக்குள் கிடைக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்


ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 35 டன் ஆக்சிஜன் நாளைக்குள் கிடைக்கும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
x
தினத்தந்தி 10 May 2021 12:12 AM GMT (Updated: 10 May 2021 12:12 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நாளைக்குள் (செவ்வாய்க்கிழமை) கிடைக்கும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

சென்னை, 

தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது:-

நோய்த்தொற்று சங்கிலியை அறுக்கச் செய்வதில்தான் ஊரடங்கின் வெற்றி அடங்கி இருக்கிறது. வணிக அமைப்புகள், தொழில் அமைப்புகள், பொதுமக்கள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். சிலவற்றில் விலக்கு அளிக்க தொழில் அமைப்புகள் கேட்டு இருக்கிறார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், ஓரிரு நாட்களில் நல்ல முடிவை முதல்-அமைச்சர் அறிவிப்பார்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. அங்கிருந்து 11-ந்தேதிக்குள் (நாளை) 35 டன் ஆக்சிஜன் தருவதாக கூறி இருக்கிறார்கள். அங்கு 70 டன்னாக உயர்த்துவதற்கான திட்டங்களை அவர்களிடம் கேட்டு இருக்கிறோம். அதற்கான உறுதியை 12-ந்தேதி தருவதாக கூறி இருக்கிறார்கள்.

தொழிற்சாலை ஆக்சிஜன் யூனிட்டுகளை, மெடிக்கல் ஆக்சிஜன் யூனிட்டுகளாக மாற்றுவதற்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம்.

பணிகள் வேகம்

கரூரில் இருக்கும் டி.என்.பி.எல். மூலம் 6 டன் ஆக்சிஜன் கிடைக்கிறது. அந்த ஆக்சிஜனை பயன்படுத்துவதற்கு ஒரு கம்ப்ரஷர் தேவைப்படுகிறது. அதை இறக்குமதி செய்வதற்கான பணிகள் நடந்து வருகிறது.

என்.எல்.சி.யுடன் பேசி 3 இடங்களில் ஆக்சிஜன் பிளான்ட் அமைத்து தருவதாக கூறியுள்ளோம். தொழில் துறை சார்பில் இதற்காக தனியாக ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஆக்சிஜன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார். தொழில்துறை அதற்கான பணிகளை வேகமாக செய்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story