கொரோனா வைரஸ் தொற்று அச்சம்: ஆஸ்பத்திரியில் இருந்து தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்


கொரோனா வைரஸ் தொற்று அச்சம்: ஆஸ்பத்திரியில் இருந்து தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்
x
தினத்தந்தி 13 May 2021 3:51 AM GMT (Updated: 13 May 2021 3:51 AM GMT)

கொரோனா தொற்று அச்சம், பொதுமக்கள் கூட்டம் கூடுவது போன்றவற்றைத் தவிர்க்கும்வகையில் ஆஸ்பத்திரிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்றும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு ஆலோசனை வழங்கியுள்ளது.

சென்னை, 

கொரோனா தடுப்பூசி, ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து பற்றாக்குறை தொடர்பாக ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த 9-ந்தேதி 28 ஆயிரத்து 897 என்றும், 10-ந்தேதி 28 ஆயிரத்து 978 என்றும், 11-ந்தேதி 29 ஆயிரத்து 272 என்றும் உள்ளது.

படுக்கை வசதிகள்

43 ஆயிரத்து 858 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், 12 ஆயிரத்து 500 கூடுதல் படுக்கைகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 6 ஆயிரத்து 487 படுக்கைகள் அமைக்கும் பணி முடிவுற்றுள்ளது. மீதமுள்ளவை 17-ந்தேதி தயாராகும்.

மேலும் 10 ஆயிரம் படுக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்துக்கு ஒருநாளைக்கு 20 ஆயிரம் குப்பி ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படும்நிலையில், 7 ஆயிரம் குப்பிகளை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.

இவ்வாறு கூறி, இதுதொடர்பாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளரின் அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

ஆக்சிஜன் அதிகரிப்பு

மேலும், தடுப்பூசி கொள்முதல் டெண்டர் கோருவது தொடர்பாக விளக்கம் அளிக்க காலஅவகாசம் வேண்டும் என்றும் அட்வகேட் ஜெனரல் கோரினார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சங்கரநாராயணன், ‘தமிழகத்துக்கு 419 டன் ஆக்சிஜன் சப்ளை செய்யப்பட்ட நிலையில், தற்போது, 519 டன் ஆக்சிஜன் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் எனும் டி.ஆர்.டி.ஓ. மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் வசதியை ஏற்படுத்த பி.எம்.கேர் நிதியத்துக்கு தமிழக அரசு விண்ணப்பித்தால் அமைக்கப்படும்’ என்று கூறினார்.

தடுப்பூசி மையங்கள்

அதையடுத்து, உடனடியாக பி.எம்.கேர் நிதியத்துக்கு தமிழக அரசு விண்ணப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர்.

மேலும், ‘ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி போடும் மையங்கள் அமைத்துள்ளதால், தடுப்பூசி போட வருபவர்கள் கொரோனா வைரஸ் பரவலை நினைத்து அச்சப்படுவார்கள். ஆஸ்பத்திரிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க, அங்குள்ள தடுப்பூசி மையங்களை அகற்றி வேறு இடங்களில் அமைக்க வேண்டும்’ எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தியாகம்

பின்னர், ‘ஆஸ்பத்திரிகளில் பணியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ ஊழியர்கள் வீடுகளுக்குச் செல்லாமல் தியாகத்துடன் பணியாற்றுகின்றனர். அவர்களது சேவை பாராட்டுக்குரியது’ என்று கூறினர்.

Next Story