இந்த மாதத்துக்கு ‘மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் 42 லட்சம் தடுப்பூசி போதாது’; கூடுதலாக ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை


இந்த மாதத்துக்கு ‘மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் 42 லட்சம் தடுப்பூசி போதாது’; கூடுதலாக ஒதுக்க தமிழக அரசு கோரிக்கை
x
தினத்தந்தி 5 Jun 2021 4:28 PM GMT (Updated: 5 Jun 2021 4:28 PM GMT)

இந்த மாதத்துக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும் 42 லட்சம் தடுப்பூசி போதாது என்றும், கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

தடுப்பூசி

தமிழகத்தில் பல இடங்களில் தடுப்பூசி இல்லாததால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியவில்லை. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் தினத்தந்தி நிருபர், ‘தேவையான அளவு தடுப்பூசி தமிழகம் உள்பட மாநிலங்களுக்கு வினியோகிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால் தமிழகத்தில் இன்று பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடப்படவில்லை. சுகாதாரத்துறை செயலாளர், 1 லட்சத்து 52 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார். உண்மையில் என்ன நிலை உள்ளது?’ என்று நேற்று கேள்வி எழுப்பினார்.

இந்த மாதத்துக்கு 42 லட்சம் டோஸ்

அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

மத்திய அரசிடம் இருந்து தற்போதுவரை 1 கோடியே 1 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன. அதில், 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு போடுவதற்காக தமிழக அரசு விலை கொடுத்து வாங்கிய 13 லட்சம் டோஸ்களும் அடங்கும். இந்த வயது வரம்பினருக்கு தடுப்பூசி வாங்குவதற்கு ரூ.85 கோடியே 48 லட்சத்தை அட்வான்சாக கொடுத்துள்ளோம். இன்று 13 லட்சம் டோஸ் வர வேண்டும். அதையும் சேர்த்து ஜூன் மாதத்துக்கு 42 லட்சம் டோஸ் தடுப்பூசி தருவதாக மத்திய அரசு கூறி இருக்கிறது.

1 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கையிருப்பு

3 நாட்களுக்கு முன்பு 4 லட்சத்து 95 ஆயிரத்து 570 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்தன. நேற்று மேலும் 50 ஆயிரம் டோஸ்கள் வந்துள்ளன. இப்போதைய நிலையில் 95 லட்சத்து 91 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 1 லட்சத்து 50 ஆயிரம் டோஸ் கையிருப்பில் உள்ளது. இன்றோ அல்லது நாளையோ தடுப்பூசிகள் வந்தால் அனைத்து மாவட்டங்களுக்கும் மக்கள்தொகை மற்றும் தொற்று பரவல் அடிப்படையில் பிரித்து அனுப்பப்படும்.

உலகளாவிய டெண்டர்

நீலகிரி கிராமப்புறங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி 1,000 பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. தமிழக அரசு 3 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசி வாங்குவதற்கு உலகளாவிய டெண்டர் கோரி உள்ளது. அதன் முடிவு இன்று தெரியும். அதன்படி தகுதி உள்ளவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு 3 கோடியே 50 லட்சம் டோஸ் தடுப்பூசி வாங்கப்படும். செங்கல்பட்டு தடுப்பூசி நிறுவனத்தில் உற்பத்தியை தொடங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

மக்கள் ஆர்வம்

செங்கல்பட்டில் உற்பத்தி தொடங்கிவிட்டால் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் தடுப்பூசி கிடைக்கும். தற்போது தடுப்பூசி போடுவதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். ஒரே நாளில் அதிகபட்சமாக 3 லட்சத்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளோம். தமிழகத்துக்கு தேவையான அளவு மத்திய அரசு சப்ளை செய்தால் தினமும் 7 லட்சம் அல்லது 8 லட்சம் பேருக்கு கூட தமிழக அரசால் தடுப்பூசி போட முடியும்.

போதவே போதாது

தமிழகத்துக்கு இந்த ஒரு மாதத்துக்கு 42 லட்சம் டோஸ் தடுப்பூசி போதவே போதாது. கூடுதலாக வேண்டும் என்று முதல்-அமைச்சர், பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார். அவரது கோரிக்கையை ஏற்று இந்த மாதத்துக்கான 42 லட்சம் டோஸ் தவிர கூடுதல் தடுப்பூசி மருந்துகளை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story