தமிழக சட்டசபை முதல் கூட்டம்: கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு


தமிழக சட்டசபை முதல் கூட்டம்: கவர்னருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
x
தினத்தந்தி 9 Jun 2021 10:19 PM GMT (Updated: 9 Jun 2021 10:19 PM GMT)

தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் வருகிற 21-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

சென்னை,

நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. கொரோனா பரவல் காரணமாக சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கடந்த மே மாதம் 7-ந்தேதி எளிமையாக நடந்த விழாவில், முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று கொண்டார். அவருடன் சேர்த்து 33 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சட்டசபைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் மே 11-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில் பதவியேற்றுக்கொண்டனர்.

சந்திப்பு

இதையடுத்து நடந்த சபாநாயகர் தேர்தலில் அப்பாவு போட்டியின்றி தேர்வானார். கு.பிச்சாண்டி துணை சபாநாயகர் ஆனார். அதோடு நாள் குறிப்பிடாமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

பொதுவாக முதல் சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். கவர்னர் உரையுடன் தொடங்கும் முதல் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்குமாறு அழைப்பு விடுப்பதற்காகவும், அதுதொடர்பாக ஆலோசிப்பதற்காகவும் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலையில் சென்றார். அப்போது, கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு, மாமல்லபுரம் வரலாறு மற்றும் அங்குள்ள சிற்பக் கலைகள் பற்றிய ஒரு புத்தகத்தை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அழைப்பு

இதையடுத்து மு.க.ஸ்டாலினுக்கு, காந்தியடிகள் பற்றிய புத்தகத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார். கவர்னர் உடனான மு.க.ஸ்டாலினின் சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் வரையிலும் நடந்தது. அப்போது, சட்டசபை முதல் கூட்டத்தை தொடங்கி வைப்பதற்கு வருகை தருமாறு கவர்னருக்கு, மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் மு.க.ஸ்டாலினிடம், கவர்னர் கேட்டறிந்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு, முதல்-அமைச்சரின் தனிச்செயலாளர்கள் உதயச்சந்திரன், உமாநாத், பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டில் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Next Story